பக்கம் எண் :

334.

    தேவே யெனநிற் போற்றாத
        சிறிய ரிடம்போய்த் தியங்கிஎன்றன்
    கோவே நின்றன் திருத்தாளைக்
        குறிக்க மறந்தேன் துணைகாணேன்
    மாவே ழத்தின் உரிபுனைந்த
        வள்ளற் கினிய மகப்பேறே
    மூவே தனையை அறுத்தருள்வோய்
        முறையோ முறையோ முறையேயோ.

உரை:

     பெரிய யானையின் தோலை அணிந்திருக்கும் வள்ளலாகிய சிவபெருமானுக்கு மகனே, மூவகை வேதனைகளை நீக்கியருளும் பெருமானே, தெய்வமே என நின்னைப் போற்றித் துதிக்காத சிற்றறிவுடையவரிடம் சென்று தியக்கத்துடன் வருத்தமுற்று எனக்குத் தலைவனாகிய உன்னுடைய திருவடிகளை நினைக்க மறந்தொழிந்தே னாதலால் எனக்கு வேறு துணையாவரைக் காணேனாயினேன், எ. று.

     துன்புற்றவர்க்கு அருளும் பொருட்டுக் கயாசுரன் என்ற யானையைக் கொன்று தோலையுரித்து அவ்வானைக்கும் அருள் புரிந்தமையால் “வேழத்தின் உரிபுனைந்த வள்ளல்” என்று சிவனைக் குறிக்கின்றார். சிவனுக்கு மகனாயினும் அவர்க்கே ஞான முரைக்கும் குருவாயினமையின், “இனிய மகப் பேறே” எனவும், தன்னைப் பரவினர்க்கு உள்ள வேதனை மூன்றையும் நீக்கியருளுவதுபற்றி, “மூவேதனையை அறுத்தருள்வோய்” என்றும் போற்றுகின்றார். இகழ்ச்சி வேதனை, இன்ப வேதனை, துன்ப வேதனை என்று வேதனை மூன்றென்பர். “ஏற்று வேதனைகள் மூன்றாம் இகழ்ச்சியோடு இன்பத் துன்பம்” (மூலசித்தி) என வருவது காண்க. அறிவாற் பெரியவர்கள் முருகப் பெருமானை முழுமுதல் தெய்வம் எனப் போற்றுதலால் அல்லாதவரைத் “தேவே யெனநிற் போற்றாத சிறியர்” என்றும், அவர்பால் நலமொன்றும் பெறாமையால் ஏமாற்ற மெய்தி அறிவு கலங்குதலால், “சிறியரிடம் போய்த் தியங்கினேன்” என்றும் இயம்புகின்றார். முருகன் திருவடிகளே துணையாவன என்று நினையாமைக்குக் காரணம் தியக்கம் என்பது பொருளாக நிற்றலால் தியங்கி என்பது காரணப் பொருளில் வந்த வினையெச்சம் என்க.

     இதனால் சிறியரிடம் போய் அறிவு தியக்க முற்ற குறையை முறையிட்டவாறாம்.

     (8)