பக்கம் எண் :

3340.

     அடுக்குந் தொண்டர் தமக்கெல்லாம் அருளீந்
          திங்கே என்னளவில்
     கொடுக்குந் தன்மை தனைஒளித்தால் ஒளிக்கப்
          படுமோ குணக்குன்றே
     தடுக்குந் தடையும் வேறில்லை தமியேன்
          தனைஇத் தாழ்வகற்றி
     எடுக்குந் துணையும் பிறிதில்லை ஐயோ
          இன்னும் இரங்கிலையே.

உரை:

     உயர்குண நிறைவாற் குன்று போன்ற பெருமானே, அன்பால் வந்தணையும் திருத்தொண்டர்கள் எல்லார்க்கும் இவ்வுலகில் திருவருள் நல்கிய நீ என்னைப் பொறுத்த அளவில் நல்கும் நற்பண்பை மறைப்பாயாயின், அது ஒடுங்கி மறையுமோ? எனக்கு நல்குதல் ஆகாதென நின்னைத் தடுக்க வல்லதொன்றும் இல்லை; உலகியல் தொடர்பு நீக்கித் தனித்திருக்கும் எனக்கு இந்தத் திருவருள் ஞானத் தாழ்வு போக்கி உய்தி பெறுவிக்கும் துணையும் எனக்கு வேறில்லை, காண். எ.று.

     சலித்த லில்லாத உயர் குணங்களே திரண்டுயர்ந்த மலை போல்பவன் சிவபிரான் என்பதனால், “குணக் குன்றே” என்று கூறுகின்றார். சிவப் பேறுப் பெற்ற திருத்தொண்டர் அனைவரும் அன்பு நெறி யொன்றையே பற்றி உயர்ந்தன ரென வரலாறு கூறுதலால், “அடுக்கும் தொண்டர் தமக்கெல்லாம் அருளீந்து” என வுரைக்கின்றார். அருள்கிலன் எனக் கொடுமை கூறுகின்றாராயினும், அது தம் மொருவர்பால் நிகழ்வதன்றி ஏனை எல்லார் பாலும் நிகழாது பெருக அருளும் பெரும் பண்பாதலை எடுத்தோதி இன்புறுவாராய், “என்னளவிற் கொடுக்கும் தன்மைதனை யொளித்தால் ஒளிக்கப் படுமோ” என ஓதுகின்றார். பேரருளும் பேராற்றலு முடைய பெருமானாதலால் சிவனது அருட் செயலைத் தடுத்து விலக்குவாரில்லை; தான் எல்லாம் வல்லவன் என்ற உண்மை விளங்க, “தடுக்கும் தடையும் வேறில்லை” என்றும், அருள் பெறாமையால் தாழ்வுற்று வீழ்ந்து படும் தமக்கு அப்பெருமான் திருவருளல்லது துணையாவது வேறு யாதும் இல்லை என்பார், “தமியேன் தனை இத்தாழ்வகற்றி எடுக்கும் துணையும் பிறிது இல்லை” என்றும், திருவுள்ளம் இரங்கி யருளாமை நன்றன்று என்றற்கு “ஐயோ இன்னும் இரங்கிலையே” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், அருட்பேற்றின் இன்றியமையாமையை வற்புறுத்தியவாறாம்.

     (18)