பக்கம் எண் :

8. ஆன்ம விசாரத் தழுங்கல்

    அஃதாவது, ஆன்மாவாகிய தான் செய்த செயல்களை நினைந்து அவற்றின் கொடுமைகளை ஓர்ந்து வருந்துமாற்றால் தன்னைத் தூய்மை செய்து கொள்வதாம். அழுங்குதல் - வருந்துதல். தூய்மை பெற விரும்புவோர் தம்முடைய குற்றங்களைத் தாமே யுணர்ந்து வருந்தி அவை பின்னரும் உண்டாகாவாறு காத்துக் கொள்ளுவது ஆன்ம விசாரத்தின் பயன். இதன்கண், ஆன்ம நாட்டம் மேலிட்டு உயிர்களிற் சிறந்த மக்களுயிர் செய்கின்ற குற்ற வகைகளை யெண்ணுகின்றார். ஆன்மாக்கள் அனைத்தையும் ஒப்ப நோக்கி அவை செய்யும் குற்றமனைத்தும் தம் மேலிட்டு, ஆன்ம கோடிகட்கு உய்தி யருள்க என்று இறைவனை வேண்டலுற்று, பெரியோர் பொறுத்தற் கரியனவும், வெகுள்வனவும், தன்னலம் பேணலும், செருக்கு மிகுதியும், வட்டிக் கொடுமையும், ஈகை இரக்க முதலியன இன்மையுமாகிய குற்றங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3343.

     போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன்
          பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன்
     ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின்
          இச்சையால் எருதுநோ வறியாக்
     காகமே எனப்போய்ப் பிறர்தமை வருத்திக்
          களித்தபா தகத்தொழிற் கடையேன்
     மோகமே உடையேன் என்னினும் எந்தாய்
          முனிந்திடேல் காத்தருள் எனையே.

உரை:

     புலைத்தன்மை யுற்ற நினைவுகளாற் சிறியனாகிய யான் மகளிரின்பத்தையே விரும்பி யொழுகலுற்று பூப்புக் காலத்திலும் அவர்களைக் கூடும் கொடிய அறிவுடையனாவேன்; பரம்பொருள் ஒன்றேயென்பதறியேன்; உலகியற் பொருள்கள் மேல் உள்ள ஆசையால் எருதின் நோயை எண்ணாத காக்கையைப் போல் பிறர்பாற் சென்று அவரைத் துன்புறுத்தி மகிழ்ந்த பாதகச் செயலால் கீழ்மையுற்ற யான் மோகமாகிய குற்றம் மிக வுடையேனாயினும் என்னை வெறுத்தொழிக்காமல் காத்தருள்க. எ.று.

     கொலை புலை முதலிய குற்ற நினைவுகளாற் கீழ்மையுற்ற மனத்தினேன் என்றற்குப் “புலை மனச் சிறியேன்” எனக் கூறுகின்றார். காம வேட்கை மீதூர்தலால் நல்லறி விழைந்து காம நுகர்ச்சியிலே மனமும் செயலும் தோய்ந்திருந்தமை விளங்க, “போகமே விழைந்தேன்” என்றும், பூப் பெய்திய காலத்தில் மகளிரைக் கூடுதல் ஆகா தெனப் பெரியோர் விலக்கினராயினும் அதனை மதியா தொழுகிய குற்றத்தைப் “பூப்பினும் புணர்ந்த வெம்பொறியேன்” என்றும் புகல்கின்றார். வெம்பொறி - கொடிய செயலை யூக்கும் பொல்லாத அறிவு. பல தெய்வக் கொள்கை யுற்றல மரும் திறத்தை, “ஏகமே பொருள் என்று அறிந்திலேன்” என மொழிகின்றார். “பல்லோரும் பரம்பொருள் ஒன்று உண்டு. அதற்பாற் பரிவு கொண்டு பரசி வாழ்தல் எல்லோரும் செய்கடனாம்” எனப் பிறக்காலத்தான்றோர் கூறுவர். ஒன்றென்னும் அறிவு சமரச மனவுணர்வுக்கு ஆக்கமாய் எல்லோர்பாலும் அன்பு செய்து இன்புற வுதவுதலின், பொருள் ஏகம் என்ப தறியாமை குற்றமாயிற்று. ஏகம் -ஒன்றென்று பொருள்படும் வடசொல். “ஏகமே வாத்துதீயம் பிரமம்” என்பது சாந்தோக்கியம். பொருள் இச்சை - பொருளைப் பெருக ஈட்டுதல் வேண்டுமென்ற பேராசை. ஆசை மேலீட்டால் பிறர்பாற் பரவி யிருக்கும் பொருளைக் கவர்ந்து தன்பால் தொகுத்துக் கொள்ள விரும்பித் தீ நெறியிற் கவர்தலும் கொலை புலை முதலிய தீச் செயல்களால் பெறுவதுமாகிய குற்றத்தைப் “பிறர் தமை வருத்திக் களித்த பாதகத் தொழிற் கடையேன்” எனப் பகர்கின்றார். பிறருடைய பொருளைக் கவர்ந்து கொள்ளும் செயலை விளக்குதற்கு “எருது நோய் அறியாக் காகமே” எனக் காட்டுகின்றார். எருதின் மேற் தோலில் மயிர்க் கால்களிற் கடித்துக் கொண்டிருக்கும் உண்ணிகளை மேயும் காக்கை, தன் வாயலாகாற் கொத்தி எடுக்குங்கால் எருதிற்குப் புண்ணும் நோயும் உண்டாதலை எண்ணவதில்லையாதலால் இவ்வாறு கூறுகின்றார். பொருள் கவரப்படுவோர் படும் துன்பத்தை யுணர்த்தற்குப் “பிறர் தமை வருத்தி” எனவும், கவர்ந்து கொள்வோர் மனநோயை எண்ணாக் கொடுமையைக் “களித்த பாதகத் தொழிற் கடையேன்” எனவும் இயம்புகின்றார். உள்ளதன் உண்மை கண்டறியும் ஒட்பம் இல்லாத குறையை “மோகமே யுடையேன்” என்கின்றார். இத்தனைக் குற்றங்களை யுடையவனாதலின் என்னைக் காண்பதே நின் திருவுள்ளத்தில் வெறுப்பை யுண்டு பண்ணுமாயினும் வெறாமல் அருளுதல் வேண்டும் என்பாராய், “முனிந்திடேல் காத்தருள் எனையே” என்று மொழிகின்றார்.

     இதனாற் பொறுத்தற் கரிய குற்றமுண்மை எடுத்தோதிப் பொறுத்து அருள் புரிக என முறையிட்டவாறாம்.

     (1)