பக்கம் எண் :

3344.

     பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப்
          புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார்
     பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த
          பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும்
     ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன்
          அன்பினால் அடுத்தவர் கரங்கள்
     கூப்பினுங் கூப்பாக் கொடுங்கையேன் எனினும்
          கோபியேல் காத்தருள் எனையே

உரை:

     மகளிர்பாற் சென்று பூப்புக் காலத்தும் பன்முறையும் கலவியிற் கூடிய வெவ்விய புலைத்தன்மை யுடைய யான், விடமுடைய பாம்பினும் கொடுமை யுடையவர் தொடர்பையே விரும்பி நின்ற பள்ளனும் கள்ளனு மாவேன்; கதவிற் பலகைகளை நெருங்க இணைக்கும் ஆப்புப் போலும் வன்மை யுடையவன்; அறச் செயல்களைச் செய்யாதவன்; உண்மையன்பர்கள் அணுக வந்து கைகுவித்து நிற்பினும் குவிக்காத கொடிய கையை யுடையவன்; ஆயினும் என் குற்றங்களைக் கண்டு சினம் கொள்ளாமல் என்னைக் காத்தருளல் வேண்டும். எ.று.

     விலக்காய நாட்களிலும் மகளிரைப் பலகாற் கூடுதல் பெருங் குற்றம் என்பது பற்றிப் “பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப் போய்ப் புணர்ந்த வெம்புலையனேன்” என்று கூறுகின்றார். விலக்கு நாட்களில் ஒருபுறத்தே ஒதுங்கியிருப்பாராதலின், அவர் இருக்குமிடம் சென்று கூடினமை தோன்ற “போய்” எனப் புகல்கின்றார். கழிகாமத்தனாயினமை பற்றி “வெம்புலையனேன்” என்று கூறுகின்றார். விடமுடைய பாம்பு போல நெஞ்சில் வஞ்ச முடையவர் தொடர்பு விலக்கத் தக்கதாகவும், தாம் அவரை விடாது கூடியிருந்த குற்றத்தைக் காட்டற்கு “விடஞ்சார் பாப்பினும் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன்” என வுரைக்கின்றார். பாம்பு - பாப்பென வலித்தது. பள்ளன் - புலையருட் கீழ்மகன். புலைச் சாதியுட் கீழ்ச் சாதியைச் சேர்ந்தவன் என்பர். கள்ளன் - திருடன். ஆப்பு - மரப் பலகைகளை இறுக இணைப்பவர் கையாளும் மரத் துண்டு. இணைப்பு வாய் தோன்றாவாறு புணர்த்தும் திறம் பற்றி “ஆப்பினும் வலியேன்” என்கிறார். செய்தற் குரியதைச் செய்யா தொழிந்த குற்றமுடைமை புலப்பட, “அறத் தொழில் புரியே” னென அவலிக்கின்றார். தம்பால் அன்புடன் வந்தவர் கை கூப்பித் தொழுத காலைத் தானும் கை குவித்துத் தொழுதல் முறையாகவும் அதனைச் செய்யா தொழிந்த குற்றத்தை, “அன்பினால் அடுத்தவர் கரங்கள் கூப்பினும் கூப்பாக் கொடுங்கையேன்,” என உரைக்கின்றார். கொடுங்கை - தீங்கு செய்ய வளைந்த கை; முறை தவறிய கொடுமை மிக்க கை யென்றுமாம்.

     இதனால், மிக்க சினமுற்றுப் புறக்கணிக்கத் தக்க குற்றங்களை யெடுத்தோதிச் சினந்திடல் வேண்டா என இறைவனை வேண்டியவாறாம்.

     (2)