3346. புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து
பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில்
தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த
தயவிலாச் சழக்கனேன் சழக்கர்
உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில்
உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன்
இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன்
என்னினும் காத்தருள் எனையே.
உரை: புலால் விற்கும் கடைப்புறங்களில் தலையைத் தாழ்த்திக் கொண்டு அலைந்து சிறு துண்டங்களைப் பொறுக்கி யுண்ணும் நாய் போல்பவனாகிய யான், ஊரெல்லையில் விளை பொருளில் விலையைக் குறிக்கொண்டு அங்காடிக் கடை விலையைக் குறைத் தலைத்த இரக்கமில்லாத தீயவனாய், கேடில்லை செய்க எனத் தீயவர் உடனிருந் தியக்கக் கொடிய செயல்களை மேற்கொண்டு பலகாலும் முயன்ற மனத்தவனாய், எனக்கு ஒப்பாரில்லை யென்று அகம்பாவம் கொண்டிருந்து குற்ற முடையேனாயினும் என்னைக் காத்தருள்க. எ.று.
தலையைத் தாழ்த்தினாலான்றித் தரையிற் கிடக்கும் இறைச்சித் துண்டங்களை எடுத்துண்ண மாட்டாமை கண்டு, “புலைவிலைக் கடையில் தலை குனிந்து அலைந்து பொறுக்கிய சுணங்கன்” என்று கூறுகின்றார். சுணங்கன் - நாய். சிதறுண்டொழியும் இழிபொருள்களையும் அலைந்து பெறும் கீழ்மக்கள் இயல்பை இதனாற் குறித்துரைக்கின்றார். புரம், ஈண்டு ஊர் எல்லைக்கண் உள்ள விளை புலன்கள் மேற்று, ஆங்கே விளைவுக்காகும் செலவைக் குறிக் கொண்டு அளவிடும் விலையை பொருளின் விலையாக்கி, பொருளை வாங்கி ஊர்க்குட் கொணர்ந்து விற்போருடைய உழைப்பையும் வாழ்வையும் எண்ணியிடும் விலையை மதியாது இரக்கமின்றிக் குறைத்து விலை பேசுவது அங்காடிச் செய்கையை அலைக்கும் தீவினையாதலால், “புரத்துத் தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த தnயவிலாச் சழக்கனேன்” எனவுரைக்கின்றார். தலைவிலை - பொருள் விளையுமிடத்து அமையும் விலை. கடைவிலை - விற்பனையாகுமிடத்து விலை. இடையிற் கொணர்வோர் உழைப்பும் முயற்சியும் எண்ணி விலை காண்டல் இரக்கப் பண்பு. இரக்கமின்றி அழக்கழித்தல் கூடாது என்பது அறநூற் கருத்து. “அங்காடிக் காரரை அலக்கழிக்காதே” என்பது பழமொழி. இது பற்றியே அங்காடி விலையை அலக்கழிப்பவரைத் “தயவிலாச் சழக்கர்” என்று கூறுகின்றார். படித்தல் -ஈண்டுக் குறைத்தற் பொருளில் வந்தது; வடிக்கு மிடத்துப் பொருள் அளவு குறைவது காண்க. அங்காடிக்காரர்களை யலைக்கும் தீயவர் சொற் கொண்டு, அங்காடி விலையை அழித்துழன்ற தமது தீச் செயலிற் கன்றிய மனத்தைச் “சழக்கர் உலைவிலை எனவே இயக்க வெந்தொழிலில் உழன்று உழன்று உழன்றதோர் உளத்தேன்” என வுரைக்கின்றார். உலைவு - கேடு. இலை விலை எனக்கு என்னுமிடத்து விலை, ஒப்புப் பொருட்டு. பொருட்கு ஒப்ப அமைவது விலையாதல் காண்க. அகங்கரித்தல் - அகம்பாவம் கொள்ளுதல். விளைபுலத்துப் பொருள் விலையே கடைவிலை யாகா தென்பது நல்லறம் என்பது காண்க.
இதனால், அங்காடியை அலைக்கழிக்கும் குற்றமெடுத்துக் காட்டியவாறு. (4)
|