பக்கம் எண் :

3352.

     உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந்
          தோதிய வறிஞருக் கேதும்
     கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில்
          குணம்பெரி துடையநல் லோரை
     அடுத்திலேன் அடுத்தற் காசையும் இல்லேன்
          அவனிமேல் நல்லவன் எனப்பேர்
     எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன்
          றிருக்கின்றேன் காத்தருள் எனையே.

உரை:

     உடையில்லை, சிறிதும் உணவில்லை என வந்து இரந்தவறியவர்க்கு யாதும் கொடுத்தறியேன்; கொடுத்து உதவவேண்டும் என்ற எண்ணமும் இல்லாதவன்; நற்குணம் படைத்த நன்மக்களைச் சேர்ந்ததில்லை; சேர்தற்கு ஆசையும் கொண்டதில்லை; உலகில் நல்லவன் என்ற பெயரை நான் எய்தியதில்லை; இத்தன்மையனாயினும் தெய்வம் தான் துணையாவது என்று கருதி யிருப்பவனாதலால் என்னைக் காத்தருள்க. எ.று.

     வறுமையால் உடுக்க வுடையும் உண்ண உணவுமின்றி வருந்தி வருபவரை, “உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் என வந்து ஓதியவறிஞர்” என்றும், “வறியார்க் கொன்று ஈவதே ஈகை” (குறள்) எனப் பெரியோர் உரைப்பது பற்றி, என்பால் வந்த வறியவர்க்கு யாதொன்றும் கொடுத்ததில்லை என்பாராய், “ஏதும் கொடுத்திலேன்” என்றும், கொடாவிடினும் கொடுத்துதவக் கருத்தில் இரக்கமுற்று எண்ணியதும் இல்லை என விளக்குவாராய், “கொடுக்கும் குறிப்பிலேன்” என்றும் விரித்துரைக்கின்றார். ஈகைச் செய்கையும் இரக்க நெஞ்சமும் உண்டாதற்கு நற்பண்புடைய நன்மக்களோடு தொடர்பும் உறவும் பெற வேண்டும் என அறவோர் கூறினும் யான் அது செய்தததுமில்லை; செய்ய விரும்பியதுமில்லை என்பாராய், “உலகிற் குணம் பெரிதுடைய நல்லோரை அடுத்திலேன் அடுத்தற் காசையும் இல்லேன்” எனக் கூறுகின்றார். நல்லினச் சேர்க்கையும் ஈகை முதலாய பண்பும் உடையவர் நில வுலகில் நல்ல பெயரும் புகழும் கொண்டு மக்களது பாராட்டைப் பெறுவது போல் யான் பெய ரெய்தியல்லை என்பாராய், “அவனி மேல் நல்லவன் எனப் பேர் எடித்திலேன்” என மொழிகின்றார். பெயரெடுத்தல், புகழப் படுதல். இந்தச் சிறப்புத்தரும் குணமும் செய்கையும் உடையனல்லனாயினும் தெய்வ மொன்றுதான் நமக்குத் துணையாவது என்ற துணி வுடையவன்; அதனை யேதுவாகக் கொண்டு என்னை ஆண்டருள்க என உரைப்பாராய், “தெய்வமே துணை யென்று இருக்கின்றேன். காத்தருள் எனையே” என்று வேண்டுதல் செய்கின்றார்.

     இதனால், ஈகையும் இரக்கமும் நல்லினச் சார்பும் இல்லாத குற்றத்தை எடுத்துரைத்தவாறாம்.

     (10)