9. அவா வறுத்தல்
அஃதாவது, வாழ்க்கையில் இடையறவின்றித் தோன்றியலைக்கும் ஆசை வகைகளை எடுத்தோதி அவற்றின் தொடர்பு ஒழித்தலாம். ஆசைகள் மனப் பொறுமையைக் கெடுத்து துன்பத்துக் குள்ளாக்குவனவாம் என்பது கருத்து.
எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 3353. தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம்
தக்கமுப் போதினும் தனித்தே
சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார்
சிறியனேன் தவஞ்செய்வான் போலே
ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே
நவிலும்இந் நாள்வயிற் றினுக்கே
காலையா தியமுப் போதினும் சோற்றுக்
கடன்முடித் திருந்தனன் எந்தாய்
உரை: எந்தை பெருமானே, மண்ணக வாழ்வு மேற்கொண்டவர் பலரும் தக்க முறையில் மூன்று காலத்தும் தனித்திருந்து ஒழுக்கமுடன் பூசைக் கடன்களைச் செய்து முடிக்கின்றார்கள். சிறுமைச் செயற் பண்புடைய யானோ தவம் செய்பவன் போல, உலகவர் காணத் தனிமையுற்று இழிவாகப் பேசப்படும் வயிறு நிறைத்தற் பொருட்டுக் காலை நண்பகல் மாலையாகிய மூன்று பொழுதும் சோறுண்ணும் கடன்களையே செய்தேன், காண். எ.று.
தாலம் - ஞாலம் என்பன நிலவுலகைக் குறிப்பன. உலக வாழ்க்கையில் வேண்டுவன ஓரளவு பெற்றவர், இறைவன் திருவருளை நினைந்து நாடோறும் வழிபடுவது கடனாம் என அறிந்தோர் கூறுதலால், இறைவழி பாடு பூசைக் கடன் எனப்படுகிறது. இறை வழிபாட்டில் மனம் உலகியல் நினைவுகளின் நீங்கித் தனித்துத் திருவருளில் ஒன்றாவது பற்றி, “தனித்து” எனவும், காலை நண்பகல் மாலையாகிய முப்போதும் மனவொருமைக்கு ஏற்புடைய காலமாதலால், “தக்க முப்போதினும்” எனவும், நீராடி நீறணிதல், பூ வெடுத்துத் தொடுத் தணிதல் முதலாகக் கூறப்படும் செயல் முறைகள் பலவும் அடங்கச் “சீலமார் பூசைக் கடன்” எனவும் சிறப்பிக்கின்றார். சிறுமை யுறுவதற்குரிய குணமும் செயலும் பொருந்தி யுள்ளமை பற்றி, “சிறியனேன்” என்றும், உலகவர் கண்டு மருளத் தவம் புரிவார் போல நடிக்கின்றமை விளக்குதற்குத் “தவம் செய்வான் போலே ஞான மேலவர்க்குக் காட்டி” என்றும் கூறுகின்றார். ஞான மேலவர், நிலவுலக, வாழ்கையிற் கருத்துடையவர். தனித்தெனப் பின்னும் கூறியது, நண்பர் உறவினர் முதலாயினோரோடு உடனிருந்து உண்ணாமை தெரிவித்தற்கு. பொழுது தோறும் தவறாது உண்ணினும் உண்பொருளை நாடிய வண்ணமிருத்தலின், வயிற்றின் இழிவு புலப்பட, “நாய் வயிறு” எனக் குறிக்கின்றார். உய்தி நாடி உயிர் நிற்றற்குரிய உடம்பைப் பேணுவது கடனாதலால், உணவுண்டலைச் “சோற்றுக் கடன்” என்று சொல்லுகின்றார்.
இதனால், உயர்ந்தோர் உய்தி வேண்டிப் பூசைக் கடனைச் செய்ய, யான் ஆசை மிக்குச் சோற்றுக் கடன் முடிக்கின்றேன் என வுரைத்தவாறாம். (1)
|