பக்கம் எண் :

10. தற் சுதந்தரம் இன்மை

    அஃதாவது, உலகில் ஓரணுவும் திருவருளாலன்றி இயங்குவதில்லை என்பது உணரப்படின், இயங்கும் உயிர்க்குத் தன்னியக்க மெனத் தனியே ஒன்றுமில்லை என உன்னி யுணர்ந் துரைத்தலாம். “பரதந்திரியம் கரை கழி பந்தம்” (ஞானா. 19) என வாகீச முனிவர் கூறுவது காண்க. தற்சுதந்தர மின்மை மிருகேந்திரம் முதலிய சிவாகமங்களிற் காணப்படுவது.

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

3366.

     இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற்
          கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே
     எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை
          அருட்சோதி இயற்கை என்னும்
     துப்பாய உடலாதி தருவாயோ
          இன்னும்எனைச் சோதிப் பாயோ
     அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ்
          வடியேனால் ஆவ தென்னே.

உரை:

     அப்பனே, இவ்வுலகில் உடலென்றும் பொருளென்றும் உயிரென்றும் பருத்துக் காணப்படும். மூன்றையும் உனக்குரியவை யென வுணர்ந்து கொண்டேனாகலின், எனக்குரிய தெனக் கருதுதற்கு எவ்விடத்தும் உரிமை சிறிதும் இல்லை; எல்லாம் நினது அருட் சோதியின் இயற்கை யுரிமை என்று சிவாகமங்கள் கூறுகின்றன; இனி எனக்குப் போக நுகர்ச்சிக் குரிய உடல் முதலியவற்றைத் தருவாயோ? தாராது மேலும் துன்பத்தைத் தருவன தந்து சோதனை செய்வாயோ? நினது திருவுளக் குறிப்பை அறிய வல்லனோ? அறியேனாதலால் ஏழையடியவனாகிய என்னால் ஆவது ஒன்றும் இல்லை, காண். எ.று.

     அறிவுடைய ஒவ்வொருவனும் வாழ்க்கையை எண்ணுவனாயின், வாழும் தனது உயிரும், கருவியாகிய உடம்பும், வாழ்க்கைப் பொருளும் என்ற மூன்று மல்லது வேறொன்றுமில்லை எனவும், அவை தாமும் உயிர்ப் பொருட்டு இறைவன் படைத்தளிக்க வந்தவை யெனவும், அவற்றின் மேல் தனக்கு உரிமையில்லை எனவும் உணர்ந்தொழுகுதல் உடல் முதலிய மூன்றையும் இறைவற்குக் கொடுத்தல் எனப்படுதலால் “இப்பாரில் உடலாவி பொருளும் உன்பாற் கொடுத்தேன்” என்றும், “எனக்கென்று இங்கே எப்பாலும் சுதந்தரம் ஓர் இறையும் இலை” என்றும் கூறுகின்றார். இறைவன் திருவருள் ஞான வொளியாதல் பற்றி, “அருட் சோதி” என்றும், அத்திருவருள் இயற்றுவிக்க ஒவ்வொரு சிற்றணுவும் இயலுவதால், “அருட் சோதி இயற்கை” யென்றும் இயம்புகின்றார். என்னும் - என்று சொல்லுகின்றன; இதற்குரிய எருவாய் வருவிக்கப்பட்டுளது. துப்பாய வுடல் - சிவ போகத்தை நுகர்வதற்குரிய ஞான உடம்பு. உடலாதி - உடல் பொருள் முதலியன. ஞான வுடம்பும் ஞானப் பொருளும் கொண்டன்றி ஞான போகம் நுகரப்படாமை விளங்க, “துப்பாய வுடலாதி தருவாயோ” என்று கேட்கின்றார். உலகியற்றுன்ப நுகர்வுக்குரிய ஊனுடம்பும் பொருளும் பிறவும் தருவாயோ மேலும் பிறப்பிறப்புக் குள்ளாக்குவயோ நின் திருக்குறிப்பு யாதோ அறிகிலேன் என்பாராய், “இன்னும் எனைச் சோதிப்பாயோ நின் திருவுளத்தையறியேன்” என இசைக்கின்றார். சோதித்தலாவது - துக்க வுடம்பும் வாழ்வும் தந்து சுதந்தர மின்மையுணரப்படுகிறதா எனக் காண்பது. சுதந்தரமின்மை யுணர்ந்தொழுகும் திறத்தைச் சிவஞான போதம் “இறை பணி நிற்றல்” என்று கூறுகிறது. உணரந்தமை விளங்க, “அடியேனால் ஆவ தென்னே” என்று கூறுகின்றார்.

     இதனால் ஆன்மாவுக்குச் சுதந்தரமின்மை விளக்கியவாறாம்.

     (1)