பக்கம் எண் :

3367.

     என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந்
          திலன்என்றே ஏங்கி ஏங்கி
     மன்னேஎன் மணியேகண் மணியேஎன்
          வாழ்வேநல் வரத்தாற் பெற்ற
     பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன்
          புகலேமெய்ப் போத மேஎன்
     அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி
          அடியேனால் ஆவ தென்னே.

உரை:

     எங்கள் பெருமானாகிய சிவபிரான் என்னை இன்னமும் தன்பால் அழைத்துச் சேர்த்துக் கொள்ளா திருக்கின்றான்; இதனை என்னென்பது எனப் பன்முறையும் ஏங்கி யொழிவ தன்றி, மன்னனே, மணியே, கண்மணியே, என் வாழ்வே, நல்ல வரப் பொருளாகப் பெற்ற பொன் போன்றவனே, அற்புதமே, செம்பொருளே. எனக்குப் புகலாயவனே, மெய்யுணர்வே, எனக்கு அன்னை யொப்பவனே, அப்பனே என்று கூவி யழைப்ப தொழிய அடியவனாகிய என்னாற் செய்யலாவது யாதாம்? எ.று.

     இவ்வுலகில் இத்துணைக் காலம் துன்பத்தில் வருந்தி யுற்றேனாகவும் என்றற்கு “இன்னும்” என்றும், துன்ப நெருப்பாற் சுடப்பட்டுத் தூயனாகியதறிந்தும் தன் திருவருள் நீழலிற் சேர்க்க வில்லை என்ற எண்ணத்தால் சாம்பினமை விளங்க, “எம் பெருமான் இங்கு இன்னும் அணைத்திலன் என்று ஏங்கி” என்றும், “என்னே” என்றும் உரைக்கின்றார். மன் -முறை வழங்கும் மன்னவன். மணி - மாணிக்க மணி. மாணிக்க மணியின் நிறமுடைமையின், “மணியே” எனவும், ஞானவொளி செய்தலால் ”கண் மணியே” எனவும் கூறுகின்றார். இன்ப வாழ்வுக் குரிய அறிவும் செயலும் அருளுதலால், “என் வாழ்வே” என வுரைக்கின்றார். நற்றவம் செய்து எய்திய வரத்தால் பெறப்பட்ட அரிய பொன் போன்றவ னென்றற்கு “நல் வரத்தாற் பெற்ற பொன்னே” எனப் புகழ்கின்றார். அருமை விளங்க “அற்புதமே” என்றும், தோற்றக் கேடின்மையும், தூய்மையும், எல்லாவற்றினும் கலந்தும் விகார மில்லாமையும் உடைமை பற்றிச் “செம்பொருள்” என்றும் இயம்புகின்றார். புகல் - அடைக்கலம் புகுமிடம். மெய்ப் போதம் - மெய்ஞ்ஞானம். சிவபோகம் வேறொரு வகையாற் பெறலாவதன்மையின் கூவியைழத்து இரப்பதன்றிச் செயல் வேறு இல்லாமை புலப்பட, “அழைத்த லன்றி அடியேனால் ஆவ தென்னே” என்று அவலிக்கின்றார். பன்முறையும் அழைப்ப நல்குவது உடையார்க்குச் சிறப்பாகாது என்பது கருத்து, “அழையாமே அருள் நல்குமே” (ஓத்தூர்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க.

     இதனால், திருவருட் பேற்றுக்கு ஏங்கிப் பன்முறையும் அழைப்பதன்றிச் செயல் வேறில்லை எனத் தெரிவித்தவாறாம்.

     (2)