3370. உடுப்பவனும் உண்பவனும் நானேஎன்
னவும்நாணம் உறுவ தெந்தாய்
தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும்
பிறப்பிறப்புத் தன்னை நீக்கி
எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு
பவஉருவாய் என்னுள் ஓங்கி
அடுப்பவனும் நீ என்றால் அந்தோஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
உரை: எந்தையாகிய சிவபெருமானே, உடுப்பவை யுடுப்பவனும் உண்பதை யுண்பவனும் நானே என்று நினைத்தற்கு வெட்கம் நிறைந்து நெஞ்சைத் தடுக்கின்றது; செய்வன செய்யுங்கால் அவற்றைத் தடுப்பவனும், தடை யெய்திய போது அதனை நீக்கி யுதவுபவனும், பிறப் பிறப்புக்களாகிய துன்பத்தைப் போக்கி எடுத்தருள்பவனும் காத்தருள்பவனும், இன்ப அனுபவ வுருவாய் என் மனத்தின்கண் தோன்றி யூக்குபவனும் நீயே என்று மெய்யுணர்ந்தோர் கூறுகின்றன ரென்றால் சிறியவனாகிய என்னால் ஆவது ஒன்றுமில்லை. எ.று.
உடுக்கும் உடைக்கும் உண்ணும் உணவுக்கும் நானே முதல் என நினைக்கும் போது உண்மை ஞானம் தோன்றி அவற்றின் ஒவ்வொரு சிறு கூறும் திருவருளின் விளைவு எனத் தெரிவிக்கிறபோது நாணம் மிக்கு வருத்துதலால் “உடுப்பவனும் உண்பவனும் நானே என்னவும் நாணம் உறுவது” என வுரைக்கின்றார். தடுத்தல், திருவருளை நினைப்பித்தற்கும், தடை நீக்கி யுதவுவது திருவருளின் விளக்கம் நினைவில் நின்று நிலவுவதற்குமாதலால், “தடுப்பவனும் தடை தீர்த்துக் கொடுப்பவனும் நீ” எனக் கூறுகின்றார். உண்மை யுணராது பிறவிக் கேதுவாகிய அறிவு செயல்களில் தோயும் போது மெய்யுணர்வு தந்து மாற்றுவதும், மாறிய நன்னெறிக்கண் பிறழாவாறு காப்பதும் திருவருளாதலை யுணர்த்த, “பிறப் பிறப்புத் தன்னை நீக்கி எடுப்பவனும் காப்பவனும் நீ” என்றும், திருவருள் ஞானம் கைவருமிடத்து இன்ப வனுபவமாய் உள்ளத்தில் உயர்ந்து தோன்றி மகிழ்விப்பது பற்றி, “இன்ப வனுபவ வுருவாய் என்னுள் ஓங்கி அடுப்பவனும் நீ” என்றும், இதனைச் சிவ ஞானிகள் தெளிய வுரைக்கின்றனர் என்றற்கு “என்றால்” என்றும், இவற்றை எண்ணுமிடத்துச் சிற்றறிவும் சிறு செயலுமுடைய என்னால் ஆவது ஒன்றுமில்லை யென்பது இனிது தெரிகின்றது என்பாராய், “அந்தோ இச் சிறியேனால் ஆவதென்னே” என்றும் இயம்புகின்றார்.
இதனால், ஆன்மாவின் சிறுமை திருவருள் ஞானத்தால் தெளிவாதல் புலப்படுத்தியவாறாம். (5)
|