பக்கம் எண் :

3371.

     சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற
          பெரும்பாவம் தன்னை எண்ணி
     நோவதின்று புதிதன்றே என்றும்உள
          தால்இந்த நோவை நீக்கி
     ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே
          ஆகும்மற்றை இறைவ ராலே
     ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச்
          சிறியேனால் ஆவ தென்னே.

உரை:

     அம்பலத்தின்கண் அருள் நடனம் பண்ணுகின்ற பெருமானே, இறப்புப் பிறப்பு எனப்படும் பெரிய பாவச் செய்கைகளை நினைந்து மனம் நோவது இப்போது உலகிற் புதுமையன்று; எப்போதும் இருந்து வருவது; இந்தத் துன்பத்தைப் போக்கி அருளின்பம் நல்குவது நின்னாலன்றியில்லை; ஏனைப் படைத்தல் காத்தல் முதலியவற்றைத் தனித் தனியே செய்யும் தேவர்களால் ஒரு சிறிதும் ஆவதில்லை என்று அறிந்தோர் கூறுவதால், ஐயோ, சிறியவனாகிய என்னால் ஆவது யாது? ஒன்றும் இல்லை. எ.று.

     சிதாகாசமாகிய ஞான சபையின் கண் ஞான நடம் புரிவது பற்றி, “மன்றிடை நடிப்போய்” எனவுரைக்கின்றார். உயிர்கள் பிறப்பதும் இறப்பதும் தொன்று தொட்டு வரும் பழம் பெரும்பொது நிகழ்ச்சியாதலால், “சாவதென்றும் பிறப்ப தென்றும் சாற்றுகின்ற பெரும் பாவம் தன்னை எண்ணி நோவது இன்று புதிதன்று என்றும் உளதால்” என எடுத்துரைக்கின்றார். “சாதலும் புதுவதன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே” (புறம். 192) எனச் சான்றோர் உரைப்பது காண்க. சாகும் போதும் பிறக்கும் போதும் துன்பமே மிகுதலால் இரண்டையும் “இந்த நோவை” எனச் சுட்டிக் கூறுகின்றார். “பெரும் பாவம்” என்றதும் இது பற்றியே யாகும். நீக்குவது துன்பமாகவே ஈவது திருவருள் இன்பமாதல் பற்றி, “ஈவது” எனச் சிறப்பிக்கின்றார். இடர் நீக்க வல்ல நீயே இன்பம் நல்குபவன் என்பாராய், “ஈவது நின்னாலே யாகும்” என எடுத்துரைக்கின்றார். ஏனைப் பிரமன், திருமால் முதலிய தேவர்கள் ஒன்றொன்றையே செய்பவராய் நினது ஆணை வழி நிற்போர் என்பாராய், “மற்றை இறைவராலே ஆவதொன்றும் இல்லை” எனக் கூறுகின்றார்.

     இதனால், பிறவித் துன்பத்தை போக்குவது தேவர்கட்கும் ஆகாததொன்று எனத் தெரிவித்தவாறாம்.

     (6)