பக்கம் எண் :

3372.

     இசைத்திடவும் நினைத்திடவும் பெரிதரிதாம்
          தனித்தலைமை இறைவா உன்றன்
     நசைத்திடுபேர் அருட்செயலால் அசைவதன்றி
          ஐந்தொழில்செய் நாத ராலும்
     தசைத்திடுபுன் துரும்பினையும் ஆகங்கரித்துத்
          தங்கள்சுதந் தரத்தால் இங்கே
     அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச்
          சிறியேனால் ஆவ தென்னே.

உரை:

     சொல்லுதற்கும் நினைத்தற்கும் மிகவும் அருமை வாய்ந்த ஒப்பற்ற தலைமையிறைவனே, உனது விரும்பத்தக்க பெரிய அருட் செயலால் யாவதும் அசைவதன்றிப் படைத்தல் முதலிய தொழில் ஐந்திற்கும் தனித்தனித் தலைவராகும் தேவர்களாலும் ஒட்டிக் கொள்ளும் சிறு துரும்பையும் நான் என்ற வீறு கொண்டு தமது இச்சை போல அசைக்க முடியாது என்று பெரியோர் கூறுதலால், ஐயோ, சிறியவனாகிய என்னால் யாது செய்யமுடியும்.

     “உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன்” எனச் சேக்கிழார் முதலிய சான்றோர் பலரும் எடுத்துரைப்பது பற்றி, “இசைத்திடவும் நினைத்திடவும் பெரிதரிதாம் தனித்தலைமை இறைவா” என்று உரைக்கின்றார். மக்கள் தேவர் அனைவர்க்கும் மேம்பட்ட தலைவனாதலின், “தனித் தலைமை இறைவா” எனச் சாற்றுகின்றார். நசைத்தல் - விருப்பப் படுதல். படைத்தல் முதலிய தொழில் ஒவ்வொன்றிற்கும் பிரமன் முதலிய தேவர் ஐவராதல் பற்றி, “ஐந்தொழில் செய்நாதர்” எனக் குறிக்கின்றார். தசைத்தல் - ஒட்டுதல். அகங்கரித்தல், நான் செய்வேன் என்ற உணர்வுற்றெழுதல். சுதந்தரம் - விரும்பம் போற் செய்யும் உரிமை. இறைவன் திருவருளாலன்றி ஒரு துரும்பும் அசையா தென்பது பற்றி, “துரும்பினையும் அகங்கரித்துத் தங்கள் சுதந்தரத்தால் அசைத்திடற்கு முடியாதேல்” என இயம்புகின்றார்.

     இதனால், அவனன்றி ஒரணுவும் அசையா தென்ற பழம் பொருளுரையை விளக்கிக் கூறியவாறாம்.

     (7)