3373. கல்லாய மனத்தையும்ஒர் கணத்தினிலே
கனிவித்துக் கருணை யாலே
பல்லாரும் அதிசயிக்கப் பக்குவந்தந்
தருட்பதமும் பாலிக் கின்றோய்
எல்லாஞ்செய் வல்லோய்சிற் றம்பலத்தே
ஆடல்இடு கின்றோய் நின்னால்
அல்லால்ஒன் றாகாதேல் அந்தோஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
உரை: எல்லாம் செய்ய வல்ல பெருமானே, திருச்சிற்றம்பலத்தின்கண் கூத்தாடுகின்ற சிவனே, கல்லினும் வலிதாகிய மனத்தையும் ஒரு கணப்பொழுதில் கனிந்த பழம் போல் மென்மை யுறுவித்துப் பலரும் கண்டு வியக்குமாறு கருணை கூர்ந்து ஞானப் பேற்றுக்கமைந்த பக்குவத்தை எய்துவித்துத் திருவருளின்பத்தையும் தந்தருள்கின்றாயாதலால், நின்னாலன்றி ஒன்றும் நடவாதென அறிஞர் அறிவித்தலால் சிறியவனாகிய யான் செய்யக் கூடியது யாது? எ.று.
“கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை, பிச்சேற்றிக் கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன் கருணை வெள்ளத் தழுத்தி வினை கடிந்த வேதியன்” (அம்) என மணிவாசகர் உரைத்தலால், “கல்லாய மனத்தையும் ஒரு கணத்திலே கனிவித்துக் கருணையாலே, பல்லாரும் அதிசயிக்கப் பக்குவம் தந்து அருட் பதமும் பாலிக்கின்றோம்” என்று கூறுகின்றார். கற் போன்ற மனத்தை மிக விரைந்து உருகும் இயல்பினதாக்குவது பற்றி, “ஓர் கணத்தினிலே கனிவித்து” எனவும், திருவருள் ஞானத்தை உள்ளத்தே ஏற்றற்குரிய பக்குவம் செய்தே அதனை நல்கியருள வேண்டுதலால், “கருணையாலே பக்குவம் தந்து அருட் பதம் பாலிக்கின்றோய்” எனவும், கல்லாய மனத்தைக் கண்டறிந்தோர் பலர் என்றற்குப் “பல்லாரும் அதிசயிக்க” எனவும் இயம்புகின்றார். பாலித்தல், செய்து பேணுதல். “எல்லாம் செய்ய வல்லவன்” என்று எடுத்து மொழிந்தமையின், “நின்னாலல்லால் ஒன்று ஆகாது” என வலியுறுத்துகின்றார். எத்தகைய அரியவற்றையும் எளிதில் செய்து முடிப்பவனென்றற்கு “அம்பலத்தே ஆடல் இடுகின்றோய்” என்று இயம்புகின்றார். சிறயவன் - அறிவு செயல்களிற் சிறுமை யுடையவன்.
இதனாற் கல்லைக் கனியாக்கும் திறம் காட்டியவாறாம். (8)
|