பக்கம் எண் :

3381.

     திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம்
          சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள்
     கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர்
          காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ
     விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம்
          விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ
     தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ
          தடைபடுமோ திருஉளந்தான் சற்றும்அறிந் திலனே.

உரை:

     தில்லை சிற்றம்பலத்துக்குச் சென்று ஆங்கு நிகழும் திருக்கூத்தைக்கண்டு பராவிய போது சித்தி யென்னும் நங்கை எதிருற்று என்னுடைய கையைப் பற்றினாள்; இருளறியாத என்னை அதற்கு முன்னே கலந்திருந்த புத்தியென்னும் மங்கை அச்சித்தியைக் கண்ட அளவில் மனம் அன்பு கொண்டு மகிழ்வாளோ; அன்றி விருப்ப மடையாமல் என்னை வெறுத்து நீங்குவாளோ; அன்றி என்பால் நட்புறுவாளோ; இவர்கட்கிடையே நாளும் பூசல் உண்டாகுமோ; அமைகின்ற பொது நிலையில் இருவருக்கும் சந்ததி யுண்டாகுமோ உண்டாகாது தடைப்படுமோ; இறைவனே, நினது திருக்குறிப்பை அறிகிலேன். எ.று.

     பொது - பொதுவிடம்; பொது நிலையுமாம். “திருப்பொது” என்று சிறப்பிக்கப்படுவதால் திருச்சிற்றம்பலமும் “தருப்பொது” என்பது இடையில் உளதாகும் நிலைமையையும் குறிக்கின்றன சிவ பெருமானது திருவருட்கூத்தைக் கண்ட போது திருவருட் சிவஞானம் கைவரப் பெற்ற திறத்தை, “திருநடம் நான் சென்ற கண்ட தருணம் சித்தி யெனும் பெண்ணரசி எத்தி என் கை பிடித்தாள்” என இயம்புகின்றார். ஞானப் பேற்றுக்குரிய ஆன்ம சிற்சத்தி முற்பட்டுக் கூடிய நலத்தைச் “சித்தியென்னும் பெண்ணரசி” என உருவகம் செய்து “எத்தி என் கைபிடித்தாள்” என வுரைக்கின்றார். சித்தி - சிந்தித்த பொருளைக் கைவரப் பெறும் ஆன்ம சிற்சத்தி. புத்தி - உணரப்படும் பொருளின் உண்மை துணியும் தத்துவக் கூறு. கறுப்பு - அறியாமை யிருள். புத்தி நன்கு விளங்கித் தோன்றுங்கால் அவ்விருள் நில்லாமையால், “கருப்பு அறியாது எனை அதன்முன் கலந்த புத்தி எனும் ஓர் காரிகை” எனச் சிறப்பிக்கின்றார். காரிகை - பெண். ஆன்மாவின் அகக்கரணக்கூறாகிய புத்தி, தெளிந்த ஞானப் பொருள் சித்தியாகுமிடத்து விகாரப்படுதலுமுண்டாகையால், “புத்தி யெனும் ஓர் காரிகை தான் கண்டளவிற் களித்து மகிழ்ந்திடுமோ” என எண்ணுகின்றார். அகக் கரணமாய் இயைந்திருப்பது பற்றி, “எனை யதன் முன் கலந்த புத்தி” எனக் குறிக்கின்றார். புத்தி முன்னது; பின்னர் வந்து கூடுவது சித்தி யென அறிக. தான் சிந்தித்து முன்பே துணிந்த பொருள் உருவாய்க் கைவருங்கால் மகிழ்ச்சிமிகுமாதலால், “கண்டளவில் களித்து மகிழ்ந்திடுமோ” எனக் கருதுகின்றார். சித்தியாகிய பொருள் தான் துணிந்ததற்கு வேறாய இயல்பினதாயின், அதற்கு முதலாகிய ஆன்மாவை வினை பற்றி நொந்து வெறுப்பதற்கிட முண்மை கண்டு, “விருப்ப முறாது எனை முனிந்து விடுத்திடுமோ” எனவும், ஆன்ம சக்தி வினை வகைக்கு அடங்கியதாதல் கண்டு இரங்கித் தான் கொண்ட அன்புறவை நீடிக்குமோ என்று எண்ணி, “நேயம் விளைத்திடுமோ” எனவும், சித்தியாய ஞானப்பொருளின் நல மிகுதி வினை கடியும் செயல் பற்றி, சித்திக்கு மாறாய் நின்று பூசல் விளைவிக்குமோ என்பாராய், “இவர்க்கு நிதம் சண்டை விளைத்திடுமோ” எனவும் இசைக்கின்றார். சண்டை - பூசல். சித்தியாகிய சிவ ஞானம் வினையால் விளையும் அசத்தைக் காட்டி வினை வழி நிற்கும் புத்தியைத் தெருட்டிச் சிவபோகத்தை நுகர்விப்பது இயல்பாகலின், “இருவர்க்கும் பொதுவில் சந்ததி யுண்டாமோ என்றும், புத்தியின் விகற்பத்தால் சிவபோக மாயை சந்ததி என ஏங்கி, “தடைபடுமோ, திருவுளம் தான் சற்றும் அறிந்திலனே” என்றும் வருந்துகின்றார்.

     இதனால், சித்தியாகிய சிவஞானப் பேரின்பத்தைப் புத்தி தத்துவம் தடுத் தொழியுமோ என ஏங்கியவாறாம்.

     (6)