பக்கம் எண் :

12

12. பிள்ளைச் சிறு விண்ணப்பம்

 

      அஃதாவது, பிள்ளைப் பருவத்துத் துள்ளும் உள்ளத்தில் எழும் விழைவு விருப்புக்கள் சிவற்றை எடுத்தோதி இறைவன்பால் விண்ணப்பம் செய்வது. சிறு விண்ணப்பம் என்பது சிலவாகிய விண்ணப்பங்களின் மேல் நிற்கிறது. கிறித்துவ சமயத்து அன்பர்கள் தமது விழைவு விருப்பங்களை இறைவனிடத்தில் முறையிடுவது போல இது வடலூர் வள்ளலார் திருவுள்ளத்தில் புதிது தோன்றிய முறையீடாகும்.

 

      ஆங்கில நாட்டு ஞானப் பெருந்தகையான வில்லியம் லா என்பவர் எழுதிய “ஏ சீரியஸ் கால்” (A Serious Call) என்ற நூற் பொருளை ஒப்பு நோக்குவது இவ் விண்ணப்பத்தின் நுண்மாண்பை உணர்தற்கு துணை செய்யும்.

 

      இதன்கண், செய்த குற்றங்களால் எய்தும் துன்பத்திற்கு ஆற்றாது அருளாதரவு செய்க என இறைவனிடம் விண்ணப்பித்தலும், தம்மை வெறுத்தலாகாதென வேண்டுதலும், செம்மறிக் கருணைத் திருநெறியை விளக்குவதும், பொய்ம்மை வேண்டாமையும், கருவி கரங்ணங்களின் இயக்கம் உணர்தலும் போக நுகர்ச்சியும் திருவருட் புணர்ப்பு என்பதும், மகளிர் கூட்டத்தை மதியாமை கூறலும், ஆன்ம சுதந்திரமின்மை விளக்கவும், காசாசை யின்மை தெரிவிப்பதும், உயிர்கட்கு இன்பம் செய்ய எழும் இச்சையும், மாந்தரனைவரும் அன்பால் போற்றி வாழ்த்தி இன்புற்றலை விழைவதும், சிதம்பரம் புதுக்கித் திருமேனி கண்டு திருவிழா எடுக்கும் ஆர்வத்தை விண்ணப்பிப்பதும், சமரச ஞான சுத்த சன்மார்க்க நெறியை விளக்குவதும், புலை கொலை தவிர்க்கும் அருள் அற வேட்கையும் பிறவித் துன்பமற வரம் பெற விழைவதும், பிறவும் கூறி, விரிந்தது தொகுத்து ஓதப்படுகின்றன. இவ்விண்ணப்ப முறை நம்பியாரூரர் “விருந்தாய சொன்மாலை” என்று சிறப்பிக்கும் மாலை வகையில் அடங்கும்.

 

      எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

3386.

     தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்
          தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
     பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப்
          பேசிய தந்தையும் தாயும்
     பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
          புனிதநீ ஆதலால் என்னை
     அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
          அம்மைஅப் பாஇனி ஆற்றேன்.

உரை:

     அம்மையும் அப்பனுமாகிய பெருமானே, வளர்ச்சியால் உடல் தடித்த மகன் செய்த தவறு கண்டு தந்தை யவனை யடிப்பானாயின், உடனே தாய் அவ்விடம் போந்து தடுத்துத் தன் மகனை அணைத்துக் கொள்வாள்; தாய் அடிப்பாளாயின், தன் கையிற் பற்றிப் பிடித்துக் கொண்டு தந்தை தன்னோடு அணைத்துக் கொள்வான்; திருநீறணிந்த திருமேனியை யுடையனாய்த் தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் தூயவனே, இவ்வுலகில் எனக்கு நூல்கள் உரைத்த தந்தையும் தாயும் நீயாதலால் இதுவரை உலகியல் துன்பங்களால் என்னை வருத்தியது போதும்; இனி உனதருளால் என்னை ஆதரிக்க வேண்டும்; இனிமேல் இத்துன்பத்தைப் பொறுக்க மாட்டேன். எ.று.

     “அம்மையோ டப்பனாகிச் செறிவொழியாது நின்ற சிவன்” (சிவ. சித்தி) எனச் சான்றோர் உரைத்தலின், அம்மையப்பன் என்பது சிவன் திருப்பெயருள் ஒன்றாதல் பொருந்துகிறது. பண்டைச் சான்றோர், “அம்மையப்பரே யுலகுக் கம்மையப்பர் என்றறிக” என்பது ஈண்டு நினைத்தற்குரியது. இன்னோரன்ன வழக்குகளை நினைந்தே வள்ளற் பெரு பெருமானும், “அம்மையப்பா” எனப் பரவுகின்றார். என்பும் தசையும் வளமையுற வளர்ந்தமகனைத் “தடித்த மகன்” என்பர். தடி - ஊன் தசை. உடலூன் வளர்ச்சி மிகுந்து உணர்வு குன்றியவனைத் “தடித்தவன் எனவும், தடியன் எனவும் நாட்டவர் ஏசுப. அத்தகைய மகன் என்பது விளங்க, “தடித்த ஓர் மகன்” எனக் கூறுகின்றார். தடித்த மகன் தந்தை வெகுண்டு அடித்தற் குரிய தவறு செய்வனாதலின் காரணம் காட்டாமலே, “மகனைத் தந்தை ஈண்டு அடித்தால்” என்றும், உயிர்க்குரிய உணர்வு நோக்கும் தந்தையினும் உடல் நலம் பேணும் தாயுள்ளம் சிறந்தமை பற்றி, “தாய் உடன் அணைப்பள்” என முற்பட வுரைக்கின்றார். தடித்த மகன், தடிப்பு மிகுதியால் தாயுள்ளம் நொந்து சிவக்கும் அளவில் தவறு செய்வதுண்மையாலும், அது பொறாது தாய் அடித்தல் இயல்பாகலானும் “தாய் அடித்தால்” என்று இயம்புகின்றார். மகன் தவறு செய்யின், தாய் அணைக்கத் தந்தையும், தந்தை யணைக்கத் தாயும் அடிப்பது அரிதாதல் பற்றி, “அடித்தால்” என்று இயம்புகின்றார். இருவரும் மகன்பால் ஒத்த அன்புடையராதல் பற்றி, “அணைப்பன், அணைப்பள்” என ஒருவினையே தந்து காட்டுகின்றார். உலகியல் வாழ்வுக் கமைந்த தாய் தந்தையர் இயல்பு இதுவாயின், பிறவாப் பேரருள் வாழ்வுக்குரிய தாயும் தந்தையும் ஆயவன் சிவபெருமான் என்றும், அதனால் “அவன் உலகுக்கு அம்மையப்பன்” என்றும் சான்றோர் எடுத்துப்பேசி இன்புறுதலும் இன்புறுத்தலும் செய்கின்றனர் என்பது இனிது புலப்பட, “பேசிய தந்தையும் தாயும் நீ ஆதலால்” என இசைக்கின்றார். அடித்தல் நோய் செய்தல் மேலும், அணைத்தல் இன்பம் செய்தல் மேலும் நிற்றலின், உலக வாழ்வில் உற்ற துன்பங்களை “அடித்த” தென்றும், இன்பங்களை “அணைத்த” தென்றும், இவ்விரண்டும் இறைவனது அருட் செயல் என்று கருதுவது தோன்ற, “அடித்தது போதும்” என்றும், “அணைத்திடல் வேண்டும்” என்றும் முறையிடுகின்றார். “பொடித் திருமேனிப் புனிதன்”, வெண்மையான திருநீறணிந்த திருமேனி கொண்ட புனிதனான சிவபிரான்.

     இதனால், பிறவிக் கேதுவாகிய குற்றங்களைச் செய்தமையால் எய்திய துன்பத்தை எடுத்தோதி ஆற்றாமை கண்டு அருளாதரவு செய்க என விண்ணப்பித்தவாறாம்.

     (1)