339. மையல் நெஞ்சினேன் மதியிலேன் கொடிய
வாட்க ணார்முலை மலைக்குப சரித்தேன்
பைய பாம்பினை நிகர்த்தவெங் கொடிய
பாவியேன் எந்தப் பரிசுகொண் டடைவேன்
மெய்யர் உள்ளகம் விளங்கொளி விளக்கே
மேலை யோர்களும் விளம்பரும் பொருளே
செய்ய மேனியெம் சிவபிரா னளித்த
செல்வ மேதிருத் தணிகையந் தேவே.
உரை: மெய்ம்மை யுடைய சான்றோர் உள்ளத்துள் விளங்குகின்ற ஞானவொளி விளக்காகிய முருகப் பெருமானே, மேலுலகத்துத் தேவர்களும் இத்தன்மையது என்று சொல்லுதற் கரியதாகிய பரம்பொருளே, சிவந்த திருமேனியை யுடைய சிவபெருமான் உயிர் வகைகள் உய்யும் பொருட்டு அளித்த செல்வமே, திருத்தணிகை மலை மேல் இருந்தருளும் தேவ தேவனே, மயக்கம் பொருந்தின நெஞ்சினையும், இயற்கை யறிவில்லாமையும் உடைமையால் கொடுமையுடன் ஒளி பொருந்திய கண்களையுடைய மகளிர் கொங்கைகளாகிய மலைகளைப் பேணிப் போற்றினேன்; அதனால் படத்தையுடைய பாம்பினை யொத்த வெவ்விய கொடிய பாவியாயினேன்; இத்தகைய நான் எந்த நலங்கொண்டு உன் திருமுன் வந்தடைவேன், எ. று.
பொய் யுரைத்த லின்றி மெய்யே நினைந்தும் சொல்லியும் ஒழுகும் பெரியோர்களின் தூய உள்ளத்தில் ஞானப் பொருளாய் நின்று ஒளி செய்தலால், முருகக் கடவுளை, “மெய்யர் உள்ளகம் விளங்கொளி விளக்கே” என்று விளம்புகின்றார். ஞான சம்பந்தரும், “பொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே, மெய்யே நின்றெரியும் விளக்கே யொத்த தேவர் பிரான்” (கழிப்) என ஓதுவது காண்க. மேலையோர் - மேலுலகத்துத் தேவர்கள். மக்களில் மேம்பட்ட பிறப்பும் ஞானமும் உடையராதலின் அவர்களாலும் உணர்ந்து ஓதற்கரிய பரம்பொருள் எனச் சிறப்பித்தற்கு, “மேலையோர்களும் விளம்பரும் பொருளே” என்று புகழ்கின்றார். செய்ய மேனி - சிவந்த திருமேனி. உய்தி பெறும் பொருட்டுத் தேவர்கள் வழிபடச் சிவபெருமான் முருகனை அளித்தருளினார் என்ற வரலாற்றை உட்கொண்டு, “செய்ய மேனியெம் சிவபிரான் அளித்த செல்வமே” என்று பரவுகின்றார். மையல் - மயக்கம். மதி - இயற்கை யறிவு. “மதி நுட்பம் நூலோடுடையார்க்கு” (குறள்) என்பது காண்க. கொடிய வாட்கண் - கொடுமையும் ஒளியும் உடைய கண். உபசரித்தல் - பேணிப் போற்றுதல். பைய பாம்பு - படத்தையுடைய விட நாகம். புறத்தே பொலிவும் அகத்தே கொடிய நஞ்சுமுடைய விடநாகம் போல அகத்தே வஞ்சம் கொண்டு விலக்குதற்கரிய கொடிய பாவங்களைச் செய்துள்ளேன் எனத் தம்மைக் குறிப்பாராய்ப் “பைய பாம்பினை நிகர்த்த வெங்கொடிய பாவியேன்” எனத் தம்மையே பழித்துரைக்கின்றார். பைய பாம்பு, குறிப்புப் பெயரெச்சத் தொடர்; “வார் சடைய வள்ளல்” (சீவக) என்றாற் போல, இத்தகைய நெஞ்சும் அறிவும் செயலு முடையேனாதலின் எங்ஙனம் யான் வந்து திருவடிப் பேற்றை எய்தக் கூடும் என்பார், “எந்தப் பரிசுகொண் டடைவேன்” என்று முறையிடுகின்றார்.
இதனால் மையல் நெஞ்சமும் மதியின்மையும் பெற்றிருத்தலால் பாவம் பல செய்த பாவியாவேன் என்று புலம்பியவாறாம். (3)
|