பக்கம் எண் :

3395.

     செறிவதில் மனத்தேன் காசிலே ஆசை
          செய்திலேன் இந்தநாள் அன்றி
     அறிவதில் லாத சிறுபரு வத்தும்
          அடுத்தவர் கொடுத்தகா சவர்மேல்
     எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள்
          இருக்கின்ற நீஅறிந் ததுவே
     பிறிவதில் லாநின் அருட்பெரும் பொருளைப்
          பெற்றனன் பேசுவ தென்னே.

உரை:

     அடக்க மில்லாத மனமுடையேனாயினும் காசு பணத்திலே இந்நாளில் ஆசை கொள்வதில்லை; இந்த நாளிலே யன்றி தெளிவறிவில்லாத சிறு பிள்ளைப் பருவத்திலும் என்னை யன்பால் அடுத்தவர் கொடுத்த காசுகளை அவர் மேலே எறிவதும், அன்றிப் பலர் காண மேட்டின் மேல் எறிவதும் யான் செய்ததை எனக்குள் ஒருவனாய் உறைந்த நீ நன்கு அறிவாய்; என்னினின்றும் நீங்குதலில்லாத நினது திருவருளாகிய செல்வத்தைப் பெற்றுளேனாதலால் இனி யான் பெறலாவது யாதாம். எ.று.

     செறிவது - அடக்கம். ஆசை வழியோடும் இயல்புடைய மனத்தை அவ்வாறு ஓடாதபடி அடக்குவது மாண்பு தரும் மன வடக்கமாகும்; அஃது இல்லாமை புலப்பட, “செறிவதில் மனத்தேன்” என்று தெரிவிக்கின்றார். எனினும் மனத்தெழும் காசாசையைப் போக்கிய திறத்தைக் கூறலுற்ற வள்ளற்பெருமான், இக்காலத்தே காசின்கண் ஆசையை நீக்கிவிட்டேன் என்பாராய், “காசிலே ஆசை செய்திலேன் இந்த நாள்” என எடுத்தோதுகின்றார். முன்னாள் இருந்ததுண்டு போலும் என ஐயம் எழாமற் பொருட்டு, “இந்த நாளன்றி அறிவதில்லாத சிறு பருவத்தும் காசாசை கொண்டிலேன்” எனக் கூறுகின்றார். முன்னையது காசு ஈட்டும் பருவமன் றென்பார், “அறிவ தில்லாத சிறு பருவம்” எனத் தெரிவிக்கின்றார் நலம் தீங்கு தேர்ந்துணரும் அறிவு “அறிவது” எனக் குறிக்கப்படுகிறது. அக்காலத்தே உறவினராயும் அன்பராயும் நண்பராயும் அடுப்பவர் உளராதலின், அவர்கள் காசு தருவது மரபாதலின், “அடுத்தவர் கொடுத்த காசு” என்றும் அக்காசின் மேல் ஆசை யில்லாமையால் தருவதை விலக்குவதும், விலகாது கொடுத்ததை அவர் மேலே எறிந்ததும் கூறுவார், “அடுத்தவர் கொடுத்த காசு அவர் மேல் எறிவதும்” என்றும், அவர் சென்று மறைந்த போது பிறர் எவரேனும் எடுத்துக்கொள்க என இனிது காண மேட்டில் எறிந்ததமை விளங்க, “மேட்டில் எறிந்ததும்” என்றும், இச்செயல் வகைகளின் மெய்ம்மை விளக்குதற்கு, “எனக்குள் இருக்கின்ற நீ யறிந்ததுவே” என்றும் இயம்புகின்றார். இங்ஙனம் மனத்தின் கட் பொருளாசை இடம் பெறாமைக்குக் காரணம் கூறுபவர், “பிறிவ தில்லா நின் அருட் பெரும் பொருளைப் பெற்றனன் பேசுவதென்னே” என வுரைக்கின்றார்.

     இதனால், திருவருட் பேற்றால் காசாசை இல்லா தொழிந்தமை தெரிவித்தவாறாம்.

     (10)