பக்கம் எண் :

3396.

     பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான்
          படைத்தஅப் பணங்களைப் பலகால்
     கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன்
          கேணியில் எறிந்தனன் எந்தாய்
     குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை
          எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
     கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக்
          கண்டனன் இனிச்சொல்வ தென்னே.

உரை:

     எந்தையாகிய பெருமானே, பணத்தின் மேல் எனக்குச் சிறிதும் ஆசை தோன்றுவதில்லை; பெற்ற பணத்தையும் என்பால் வைத்துக் கொள்ளாமல் பலமுறைக் கிணற்றிலும் குளத்திலும் கேணியிலும் வீசி எறிந்ததுண்டு; அருட் குண மாண்பாக நீ அருளுகின்ற பொருள்களைக் கைசேரப் பெற்றுப் பிறர்க்கும் உதவுகின்றேன்; கணப் பொழுதில் எல்லா நலங்களையும் அறிவுறுத்தும் ஞானத்தை நல்கும் நின் திருவருளைக் கண்டு கொண்டேனாதலால் இனிமேல் யான் சொல்வதற்கு யாது உளதாம். எ.று.

     பணம் - பொன்னாலும் வெள்ளியாலும் செம்பு முதலிய பிற உலோகங்களின் கலப்பாலும் வாணிகப் பண்டமாற்றுக்கு அரசு வகுத்தளிக்கும் நாணயம்; இந்நாளில் இவை வெறுங் காகிதத்தாற் பெரிதும் இயங்குகிறது. பணத்தாற் பலவகைப் பொருள்களும் நலங்களும் பெறப்படுகின்றமையின், யாவரும் பணத்தின் மேல் ஆசை யுறுவர். மண்ணில் வாழ விரும்புவோர்க்கு இன்றியமையாத இப்பணத்தின்பால் தமக்கு ஆசையில்லாமை கூறும் வள்ளற் பெருமான், “பணத்திலே சிறிதும் ஆசை ஒன்றில்லை” எனவும், தாம் கைவரப் பெற்ற பணங்களை விருப்பின்றிக் கிணற்றிலும் குளத்திலும் கேணிகளிலும் எறிந்தேன் என்பாராய், “படைத்த அப்பணங்களை யெல்லாம் கிணற்றிலே எறிந்தேன் குளத்திலே எறிந்தேன்; கேணியில் எறிந்தனன்” எனவும் இயம்புகின்றார். கிணறு - கறையுற அமைந்த நீர்நிலை; கேணி - கரையமையாது இயல்பாக அமைந்தது. இந்நாளில் வேறுபாடு நோக்காது நாட்டின் சூழ்நிலைக் கொப்பக் கிணறு என்றும் கேணி என்றும் வழங்குகின்றனர். கையில் இருப்பது காணின், விருப்புடையார் கவர்தற்குச் சூழ்ந்து துன்பம் செய்தற்கு ஏதுவாதலை யெண்ணி, கிணறு குளம் கேணி முதலியவற்றில் எறிந்தாராகலின், “கேணியில் எறிந்தனன்” எனக் கிளந்து மொழிகின்றார். கொடுக்கின்ற தமக்கும் பெறுகின்ற பிறர்க்கும் நலமுண்டாக உதவும் பொருள் நலம் சிறக்க, “குணத்திலே நீ தான் கொடுக்கின்ற பொருள்” என்று கூறுகின்றார். நலம் விளைவிக்கும் நன்பொருள் இகழ்ந் தெரியப்படா தென்பது பற்றி, “நீ தான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன்” என்றும், பயன்படுத்தும் சிறப்பை, “பிறர்க்கே கொடுக்கின்றேன்” என்றும் பேசுகின்றார். பணத்தையும் பணத்தாற் பெறலாகும் நலத்தையும், அதனாற் பெறலாகாத ஞானவின்பத்தையும் பிற வின்பங்களையும் தரவல்ல பெருமை மிக்க தென்றற்கு “கணத்திலே எல்லாம் காட்டும் நின் திருவருள்” எனப் புகழ்கின்றார்.

     இதனால் பணத்தாசை யில்லாமை விளக்கியவாறாம்.

     (11)