34. முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவே லரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.
உரை: முடியா முதற் பொருளே, முருகனே, குமரனே, வடிவேலேந்தும் அரசனே, மயிலேறும் மணிபோலும் பெருமானே, அடியவர்க் கெளியவனே, அரியவனே, பெரியவனே, விலக்கரிய கதியாகுபவனே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலிடமாம். எ. று.
பசு பாசங்களாகிய பொருள்கள் போல இறைவன் ஒடுங்குதல் இல்லாதவனாதலால் அவனை “முடியா முதலே” என்று சிறப்பிக்கின்றார். “பொன்னம்பலத்து எம் முடியா முதலே” (கோயில் மூத்த. 1) என்று மணிவாசகனார் மொழிவது காண்க. என்றும் இளமை மாறாமை பற்றிக் “குமரா” என்றும் மணம் கமழும் இளமை நலமுடைமை பற்றி, “முருகா” என்றும் கூறுகிறார். முருகன் என்னும் பெயர் சிறப்பு மிக்கதென்ற கருத்துத் தோன்ற, “அரும்பெறல் மரபின் பெரும் பெயர் முருக” (முருகு) என நக்கீரர் கூறுவர். “குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள்” (பெருவேளூர்) என்று திருநாவுக்கரசர் சிறப்பிப்பது அறிக. வடி-கூர்மை. முறை செய்தலும் உலகுயிர்களைக் காத்தலும் செய்தலால் முருகனை, “அரசே” என்று பரவுகின்றார். மாணிக்க மணி போலும் செம்மைநிற முடைமை பற்றி, “மணியே” எனப் புகழ்கின்றார். ஞானநாட்டம் உடையார்க் கன்றி அவனைக் காண்டல் கூடாமையால், “அரியாய்” என்றும், பெரியோ ரேத்தும் பெருமானாதலால் “பெரியாய்” என்றும் பேசுகின்றார். எல்லா வுயிர்களாலும் விரும்பப்படுவ தாதலால் சிவகதி “கடியாக் கதி” எனப்படுகிறது. எனவே, ஏனைய மக்கள்கதி தேவகதி முதலியன கடியப்படுவன என்பதாம்.
இதனால், முடியா முதலும் முருகனும் குமரனும் பிறவுமாகிய கந்தக் கடவுள் திருவடியே புகலிடம் என்பதாம். (34)
|