340. மதியில் நெஞ்சினேன் ஒதியினை யனையேன்
மாதர் கண்ணெனும் வலையிடைப் பட்டேன்
பதியில் ஏழையேன் படிற்றுவஞ் சகனேன்
பாவி யேனெந்தப் பரிசுகொண் டடைவேன்
பொதியில் ஆடிய சிவபிரான் அளித்த
புண்ணி யாவருட் போதக நாதா
துதியி ராமனுக் கருள்செயும் தணிகைத்
தூய னேபசுந் தோகைவா கனனே.
உரை: அம்பலத்தில் ஆடல் புரிகின்ற சிவபெருமான் பெற்றருளிய புண்ணிய மூர்த்தியே, அருள் ஞானத்தை அறிவுறுத்தருளும் குருநாதனே, வணங்கித் துதித்த நாராயண மூர்த்திக்கு அருள் புரிந்த தணிகைத் தூயவனே, பச்சை நிறம் கொண்ட மயிலை வாகனமாக உடையவனே, இயற்கை யறிவொடு படாத நெஞ்சுடைமையால் ஒதி மரம் போன்ற யான் மகளிரது கண்ணெனப்படும் பார்வை வலையில் அகப்பட்டு நியமிப்பாரில்லாமல் நல்லறி வில்லாத ஏழையாகித் தீமை பொருந்திய வஞ்சகம் புரியும் பாவியாயினேன்; ஆகையால் யான் என்ன நற்பண்பு கொண்டு உன் திருமுன்னர் வந்தடைவேன்? எ. று.
பொதுவிடமாதலால் இறைவன் திருக்கூத்தாடிய திருவம்பலத்தைப் “பொதியில்” என்று குறிக்கின்றார். சிவபுண்ணியப் பொருளாகிய சிவனிடத்தில் தோன்றினமையால் முருகப் பெருமானைப் “புண்ணியன்” என்று புகல்கின்றார். பிரமனுக்கும் சிவனுக்கும் பிரணவத்தி லடங்கிய அருள் ஞானத்தைச் செவியறி வுறுத்த சிறப்புப் பற்றி, “அருட் போதக நாதா” என்று பரவுகின்றார். “தேக்கு மறை மற்றுத் தெள்ளுந் தமிழ் முனிக்கு, நீக்கமின் ஞான நிலையருளும் வாய்மை யான், ஊக்கமிலோ முணரச் சராசரங்கள், தாக்கி லுருவாய்த் தழைத்த பிரான் போலும், தந்தை தாய் நரப்பட் டவிர்ந்தமழப் போலும்” (தணிகைபு. நாரணன்-18) என்று தலபுராணம் கூறுதலால், “துதி இராமனுக் கருள்செய்யும் தணிகைத் தூயனே” எனக் கூறுகின்றார். எல்லாப் பொருளிடத்தும் கலந்து நின்றானாயினும் அவற்றால் தூய்மை கெடாதவன் என்பதற்குத் “தூயன்” என்று சொல்லுகிறார். பசுந்தோகை - பச்சை மயில். இயற்கையறிவு வழி நின்று இயங்கும் இயல்புடைய நெஞ்சம் அவ்வியல்பின் நீங்கிப் புலங்கள் மேல் நெறி பிறழ்ந்து கெடுதல் தோன்ற, “மதியில் நெஞ்சினேன்” என்றும், அறிவிலும் மனத்திலும் திட்பமில்லாமை புலப்பட, உள் வலியில்லாத ஒதி மரத்தை உவமமாகக் காட்டலுற்று, “ஒதியினை அனையேன்” என்றும், இதனால் மகளிரின் கண்ணோக்கு எழுப்பும் காமத்தீ வலையிற்பட்டுத் திரிந்தமை விளங்க, “மாதர் கண்ணெனும் வலையிடைப்பட்டேன்” என்றும் இயம்புகின்றார். நெறிப்படுத்திச் செலுத்தும் தலைவர் காவல் இல்லாமையால் அறிவும் ஒழுக்கமும் இன்றித் தீமை செய்தலும் வஞ்சகம் புரிவதும் ஆகிய தீயவற்றைச் செய்து பாவியாயினேன் என்பாராய்ப் “பதியில் ஏழையேன் படிற்று வஞ்சகனேன் பாவியேன்” என்று சொல்லி வருந்துகிறார். நெஞ்சினேன், அனையேன் முதலிய முற்று வினைகள் எச்சப் பொருளில் வந்தன. இத்தன்மைகளை யுடைய யான் எந்த நற்பண்பு கொண்டு உன் திருமுன் அடைவேன் என்று கூறுவாராய், “எந்தப் பரிசுகொண் டடைவேன்” என அவலிக்கின்றார். திருநாவுக்கரசரும், “ஒருவர் தலைகாவல் இலாமையினால்“ எனவும், “காத்தாள்பவர் காவல் இகந்தமையால்” எனவும், தாமுற்ற துன்பத்துக்குக் காரணம் காட்டுவது காண்க. பதி - தலைவர்.
இதனால் மதியின்மையும் பதியின்மையும் பிறவும் காரணமாகப் பாவியானமை தெரிவித்தவாறாம். (4)
|