3401. சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித்
தனித்தபேர் அன்புமெய் அறிவும்
நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா
நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே
சிற்சபை நடமும் பொற்சபை நடமும்
தினந்தொறும் பாடிநின் றாடித்
தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம்
செய்வதென் இச்சையாம் எந்தாய்
உரை: மெய்ம்மை நெறிக்குரிய சபையினரோடு கூடித் தனிச் சிறப்பமைந்த பேரன்பும் உண்மை ஞானமும் நல்லவர்க்குரிய ஒழுக்கமும், பொய்ம்மை யுறாத நல்ல சத்திய வாழ்க்கையும் உடையனாய், ஞான சபை, பொன்னம்பலம், ஆகிய இரண்டின்கண் நாடோறும் நிகழும் நடனம் கண்டு பாடி மகிழ்வுட னாடி அழகிய தொகுதி கொண்ட உலகத்து உயிர் வகைகட்கெல்லாம் இன்பம் தரும் செயல்களையே செய்தல் வேண்டும் என்பது எனது விருப்பம், காண். எ.று.
நிலையில்லாத கொள்கைகளை விடுத்து யாவர்க்கும் என்றும் நலம் தரும் கொள்கைகளை மேற்கொண்டு நல்லோர் தம்மிற் கூடியிருந்து தொண்டு புரியும் நற்சபை, “சற்சபை”யாகும்; அப் பெருமை மிக்க சபையினரோடு கூடித் தூய அன்பும் அறிவும் ஒழுக்கமும் மெய்ம்மை யுலகியல் வாழ்வும் உடையராய், தாம் வாழ்வதோடு பிறரையும் வாழச்செய்வது சற்சபையாளர்க்குச் சால்பாகும்; அது பற்றி, “தனித்த பேரன்பும் மெய்யறிவும் நற்சபைக்குரிய ஒழுக்கமும் அழியா நல்ல மெய்வாழ்க்கையும் பெற்று” என வுரைக்கின்றார். சிற்சபை நடனம் - ஞான நடனம்; பொற்சபை நடனம் உடம்பொடு கூடிய உயிர் உலகில் வாழ்க்கை நடத்துதற்கேதுவாகும் ஊன நடனம். ஞான நடனம் அறிவுக்கும், ஊன நடனம் செயற்கும் உரியவை. அறிவும் செயலும் மிக்கும் குறைந்தும் ஒத்தும் இயலும் உயிர் வாழ்வுக் கமைந்த சுத்த மாயா காரியமாதலின், இரண்டையும் பாராட்டிப் போற்றல் இன்றியமையாமை குறித்து, “சிற்சபை நடமும் பொற்சபை நடமும் தினந்தோறும் பாடி நின்றாடி” என்று கூறுகின்றார். தென்சபை, எதுகை பற்றித் “தெற்சபை” என வந்தது. தென்சபை - அழகி்யதொகுதி. உயிர்த்தொகை, “நற் சபை” எனவும், அவ்வுயிர்த் தொகை சிவனுறையும் இயற் கோயிலாதலால் அவற்றிற்கு இன்பம் செய்வது இறைவற்குப் புரியும் சிவப் பணியாதலால், “உலகத்து உயிர்க்கெலாம் இன்பம் செய்வது என் இச்சை” என இயம்புகின்றார்.
இதனால், உயிர்த்தொகைகட்கு இன்பம் செய்யும் இச்சையை எடுத்தோதியவாறாம்.. (16)
|