3403. எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே
எண்ணிநல் இன்புறச் செயவும்
அவ்வுயிர் களுக்கு வரும்இடை யூற்றை
அகற்றியே அச்சநீக் கிடவும்
செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச்
சிவசிவ என்றுகூத் தாடி
ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே
ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்.
உரை: எந்தையாகிய சிவனே, உயிர் வகைகள் யாவையும் எனது உயிர் போலக் கருதி, அவை யனைத்தும் நல்ல இன்பம் பெறச் செய்யவும், அவற்றிற்கு, வருகின்ற துன்பங்கள் யாவற்றையும் நீக்கி அவற்றை யலைக்கும் அச்சத்தைப் போக்கவும், மனத்தின்கண் செம்மை யறம் பூண்டு உன்னுடைய திருவடிகளை வாயாரப் பாடிச் சிவசிவ என ஓதி இன்பக் கூத்தாடி, உள்ளத்திற் பொருந்துகிற மகிழ்ச்சியினால் அறிவு கெடாமல் இவ்வுலகில் உயர்வு பெறவும் விரும்புகின்றேன், காண். எ.று.
ஊர்வன பறப்பன முதலாக வுள்ள உயிர் வகைகள், எழுவகை யுற்று எண்ணிறந்தனவாய் விரிந்துளவாகலின், “எவ்வுயிர்த் திரளும்” எனத் தொகுத்துரைக்கின்றார். உயிர் என்னும் பொருட் டன்மையால் தானும் அவற்றுள் ஒன்றாதல் பற்றி, “என்னுயிர் எனவே எண்ணி” எனவும் இன்ப மொன்றே உயிர்களால் வேண்டப் படுவதாகலின், “நல்லின்புறச் செயவும்” எனவும் இயம்புகின்றார். நெடிது நுகரு மளவிற்றாயது “நல்லின்ப” மெனப்படுகிறது. “எல்லா வுயிர்க்கும் இன்ப மென்பது தான் அமர்ந்து வரூஉ மேவற்றாகும்” என்பது தொல்காப்பியம். வேண்டப்படும் இன்பம் தன்னால் இயல்வதும் பிற வுயிர்களால் இயல்வதுமென இருவகைத்தாயினும், பிறவற்றால் உளதாவது பெரிதாதல் நோக்கி, “இன்புறச் செயவும்” என்றும், தன்னுயிர் ஒப்ப வெண்ணினாலன்றி இன்புறுவித்தல் இயலாமை பற்றி, “என்னுயி ரெனவே எண்ணி” எனவும், இன்பத்தை யாக்குவதும், அதற்குத் தடையாயதை நீக்குவதும் இன்பமாதலால், “அவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றை அகற்றியே அச்சம் நீக்கிட” எனவும் உரைக்கின்றார். இடையூற்றை நீக்குவதுடன், அது மேலும் வருமோ என நிகழும் அச்சமும் இன்பத்துக்குத் தடையாதலால், “அச்சம் நீக்கிட” என மிகைபட விளம்புகின்றார். மனம் செவ்வை யுடையார்க்கன்றி இறைவன் திருவடி ஞானம் உண்டாகாதாகலின். “செவ்வையுற்றுனது திருப்பதம் பாடி” என்றும், சிவ சிவ எனச் சிந்தித்து வாயால் ஓதலுறும் உள்ளத்தில் பிறக்கும் இன்ப வொளி யசைவு ஞானத் திருக் கூத்தாதலால் “சிவ சிவ என்று கூத்தாடி” என்றும், திருக்கூத்திடைப் பிறக்கும் செந்தேன் மயக்கின் கண் நான் நுகர்கின்றேனெனத் தன் முனைப்புத் தோன்றிக் கெடாமை வேண்டுகின்றாராகலின், “ஒவ்வுறு களிப்பால் அழிவுறாது இங்கே ஓங்கவும் இச்சை காண்” என்றும் எடுத்து மொழிகின்றார். ஓதும் உள்ளத்துள் ஓங்கும் இன்ப வொளியைப் பெரியோர், “கனி பவளத்தினன் காரிருள் நீங்கி, ஒளி பவளத் தென்னோ டீசன் நின்றானே”
(திருமந். 2695) என வுரைப்பது காண்க.
இதனால் உயிர்கட்கு இன்பம் செய்யும் விழைவு விளம்பியவாறாம். (18)
|