பக்கம் எண் :

3404.

     உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி
          உன்அறி வடையும்நாள் வரையில்
     இலகிஎன் னோடு பழகியும் எனைத்தான்
          எண்ணியும் நண்ணியும் பின்னர்
     விலகிய மாந்தர் அனைவரும் இங்கே
          மெய்யுறக் கூடிநின் றுனையே
     அலகில்பேர் அன்பில் போற்றிவாழ்ந் திடவும்
          அடியனேற் கிச்சைகாண் எந்தாய்.

உரை:

     எந்தையாகிய சிவனே, உடல் கருவி கரணம் உலகுகளால் பெறும் அறிவு எனக்கு உண்டான நாள் முதல் உனது திருவருளுண்மையுணர்வு எய்தும் நாள் வரையில் என்னொடு கூடிப் பயின்றும் என்னை நினைந்தும் என்னை அடைந்தும் பின்பு என்னினின்று பிரிந்தும் நிலவும் மாந்தர் அனைவரும் இவ்வுலகில் மொய்யாற் கூடி நின்று உன்னை அளவின்றிப் பெருகும் அன்புடன் போற்றி வாழ்த்தியின்புற வேண்டுமென்பது அடியனாகிய என்னுடைய விருப்பம், காண். எ.று.

     உலகறிவு, உடலிடத்துக் கண் முதலிய கருவிகளாலும், மன முதலிய கரணங்களாலும் உலகியற் காட்சிகளாலும் உளதாகும் அறிவு. பிறந்து மொழி பயிலும் காலத்தே இவ்வறிவு எய்தத் தொடங்குதலின், “உலகறிவு எனக்கு இங்கு உற்ற நாள் தொடங்கி” என வுரைக்கின்றார். “தொடங்கி” என்பதனால் அறிவுக்கு வளர்ச்சியுண்மை காட்டியவாறாம். கணந்தோறும் மாறி மாறி இயலுவது உலகியலாதலால் அம்மாற்றத்துக் கொப்ப மாறியியலுவது அறிவு வளர்ச்சியென அறிக. இறைவன், உயிர், உலகு என்ற மூன்றன் உண்மையுணர்தலும், இவை தம்முட் கொண்டிருக்கும் தொடர்பையும், அத் தொடர்பால் உளவாகும் காரண காரியங்களை யுணர்தலும், அந்நெறியிற் செய்வன தவிர்வன தெளிதலும் ஆகிய இவற்றின் திரண்ட அறிவை, இறையறிவு என்பாராய், “உன்னறிவு” எனவும், உலகியலறிவு பழுத்த பொழுது அஃது உண்டாவது உணர்த்த “உன்னறிவு அடையு நாள் வரை” எனவும் இயம்புகின்றார். தன்னொடு தோன்றி வளர்ந்தமை விளங்க, “இலகி” என்றும், சேர்ந்தும் நட்புற்றும் பிரிந்தும் மாறுபட்டும் மக்கள் இருப்பதனால், “என்னோடு பழகியும் எனைத் தான் எண்ணியும் நண்ணியும் பின்னர் விலகிய மாந்தர் அனைவரும்” என்று கூறுகின்றார். “பின்னர் விலகிய” என்றது முன்னர்ச் சேர்ந்தும் கூடியும் இருந்தமை நினைவு படுத்தற்கு. மெய்யுறக் கூடலாவது உடம்பாலும் உள்ளத்தாலும் ஒன்றுதல். அஃது உண்மையாற் பெருமையுறும் அன்பால் எய்துதலால், “அலகில் பேரன்பிற் போற்றி வாழ்த்திட” என வற்புறுத்துகின்றார்.

     இதனால், மாந்தர் அனைவரும் அன்பாற்போற்றி வாழ்த்தி யின்புறலை விழைந்தவாறாம்.

     (19)