3409. இவையலால் பிறிதோர் விடயத்தில் இச்சை
எனக்கிலை இவைஎலாம் என்னுள்
சிவையொடும் அமர்ந்த பெருந்தயா நிதிநின்
திருவுளத் தறிந்தது தானே
தவம்இலேன் எனினும் இச்சையின் படிநீ
தருதலே வேண்டும்இவ் விச்சை
நவைஇலா இச்சை எனஅறி விக்க
அறிந்தனன் நவின்றனன் எந்தாய்.
உரை: சிவபிரானாகிய எந்தையே, இதுகாறும் கூறிய இவ்விடயங்களிலன்றி வேறு விடயங்களில் எனக்கு விருப்பமில்லை; என் மனத்தின் கண் உமாதேவியொடும் கூடியிருந்தருளும் அருட் பெருஞ் செல்வனாகிய நின்னுடைய திருவுள்ளம் இவை யனைத்தையும் இனிதறிந்ததாகும்; எண்ணியபடி எய்தும் தவமுடையேன் அல்லனாயினும் என் எண்ணப்படி அருள் செய்ய வேண்டுகிறேன்; யான் கொண்ட இவ்விழைவுகள் யாவும் குற்றமில்லாதவை என்று திருவருள் அறிவிக்க அறிந்துள்ளேன்; அதனால் அவற்றை எடுத்து மொழிந்தேன்; ஏற்றருள்க. எ.று.
விரிந்தது தொகுத்தல் என்ற முறை பற்றி “இவை” எனத் தொகுத்துச் சுட்டுகின்றார். இவற்றின் இனமாய் வேறுப்பட்டவற்றுள் எந்த வகை விழைவும் கொண்டிலேன் என்பாராய், “பிறிதோர் விடயத்தில் இச்சை எனக்கு இலை” எனக் கூறுகின்றார். “ஓர் விடயத்திலும்” எனற்குரிய சிறப்பும்மை தொக்கது. இச்சை - விழைவு. சிவை - உமாதேவி; சிவன் என்னும் ஆண்பாற் பெயர்க்குரிய பெண்பால் சிவை என்பதென வுணர்க. அருட் சத்தியிற் பிரிவின்றி இயைந்திருப்பது சிவமாதலின், “சிவையொடும் அமர்ந்த பெருந் தயாநிதி” எனப் பராவிக் கூறுகின்றார். தயாநிதி - அருட்செல்வன்; அருளே திருவுருவாய் அமர்ந்த பெருமானாதலால் “பெருந் தயாநிதி” எனக் குறிக்கின்றார். தமது “அறிவினுள் அருளால்” மன்னுதலை யுணர்ந்திருப்பது விளங்க, “என்னுள் அமர்ந்த பெருந் தயாநிதி” எனவும், அருளால் எழுந்தருளுதல் புலப்பட, “அமர்ந்த” எனவும் இயம்புகின்றார். அத்துச் சாரியை வேண்டாவிடத்து வந்ததாம். இறைவன் கரண வறிவின னல்லனாதலால், எண்ணிய எண்ணியாங்கு எய்துதல் தவமுடையார்க்கே அமைவதாகலின், “தவமிலேன் எனினும்” எனவும், எனது இச்சை தானும், நீ விழைவிக்கவுளதாகலின், அருளுதல் கடன் என்பாராய், “இச்சையின்படி நீ தருதலே வேண்டும்” எனவும், என்னுடைய விழைவுகள் வரன் முறையில் பிழையில்லன என்றற்கு, “இவ்விச்சை நவையிலா இச்சை” எனவும், நவை யின்மையும் திருவருள் ஞானத்தால் அறிந்துரைக்கின்றேன் என்பார், “அறிவிக்க அறிந்தனன் நவின்றனன் எந்தாய்” எனவும் இயம்புகின்றார்.
இதனால் விரிந்தது தொகுத்து நலம் உரைத்தவாறாம். (24)
|