பக்கம் எண் :

343.

    தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன்
        தீய மாதர்தம் திறத்துழல் கின்றேன்
    பாங்கி லாரொடும் பழகிய வெறியேன்
        பாவியேன் எந்தப் பரிசுகொண் டடைவேன்
    தேங்கு கங்கையைச் செஞ்சடை யிருத்தும்
        சிவபிரான் செல்வத் திருவருட் பேறே
    ஓங்கு நற்றணி காசலத் தமர்ந்த
        உண்மை யேயெனக் குற்றிடும் துணையே.

உரை:

     ஓடாது தேங்குகின்ற கங்கை யாற்றைச் சடையின்கண் வைத்திருக்கும் சிவபெருமானுடைய திருவருட் செல்வப் புதல்வனே, உயர்ந்த நல்ல தணிகை மலை மேல் எழுந்தருளும் மெய்ப் பொருளே, எனக்கென்று அமையும் துணைவனே, தீய நினைவுகள் நிறைந்த நெஞ்சமும் வேங்கைப் புலி போல் கொடுஞ் செயலும் உடையனாய்த் தீது புரியும் மகளிரொடு கூடி உழல்பவனும் நற்பண்பில்லாதவரோடு பழகிய வீணனுமாய்ப் பாவச் செயல்களைச் செய்துள்ள யான் எவ்வகை நலம் கொண்டு உன் திருவடியை வந்தடைந்வேன்? எ. று.

     பகீரதன் பொருட்டு வந்த கங்கையாற்றைக் கீழே இழிந்தோடாதபடி விரித்த தன் சடையில் தேங்கி நிற்கும்படி தடுத்து நிறுத்திக் கொண்ட சிறப்பு விளங்கத் “தேங்கு கங்கையைச் செஞ்சடை யிருத்தும் சிவபிரான்” என்றும், அப்பெருமான் தேவர்பால் கொண்ட அருளால் பெற்ற மகனாதலால், முருகனைச் “செல்வ திருவருட் பேறே” என்றும் கூறுகின்றார். வடவேங்கட மலைத்தொடரின் தென்பால் சிதறித் தோன்றும் குன்றுகளில் சிறப்பு மிக்கு விளங்குதல் பற்றி, “ஓங்கு தணிகாசலம்” எனவும், முருகப் பெருமான் எழுந்தருளும் நல்வளமுடைமை பற்றி, “நற்றணிகாசலம்” எனவும் சிறப்பிக்கின்றார். உண்மை ஞானத் திருவுருவாதல் பற்றி, “உண்மையே” எனவும், வழிபடுகின்ற தமக்கு இனிய அருட்டுணையாவது புலப்பட, “எனக்கு உற்றிடும் துணையே” எனவும் எடுத்துரைக்கின்றார். தீய நினைவுகளையே நினைப்பது பற்றித் “தீங்கு நெஞ்சினேன்” என்றும், உயிர்க் கொலையே செய்துண்டு வாழும் வேங்கைப் புலி போல் தீச்செயலே தம்பாற் காணப்படுவதையெண்ணி, “வேங்கையை அணையேன்” என்றும் இயம்புகின்றார். காமவிச்சை மிகுந்து மகளிர் உவப்பன செய்து திரியும் தமது நிலைக்கு வருந்தித் “தீய மாதர்தம் திறத்துழல் கின்றேன்” எனவும், திருவருட் பேற்றுக்குரிய பாங்கு இல்லாமல் பொதுமகளிர் திறத்தராய் உலவும் தீய பேற்றுக்குரிய பாங்கு இல்லாமல் பொதுமகளிர் திறத்தராய் உலவும் தீய பண்புடையார் கூட்டத்திலே யிருந்து ஒரு நற்பயனும் பெறாதொழிகின்றமை நினைந்து, “பாங்கிலாரொடும் பழகிய வெறியேன்” எனவும், அதனால் தாம் பாவமே செய்திருப்பதை யுணர்ந்து, “பாவியேன்” எனவும் பகர்கின்றார். தீய மாதர் - பிறர் பொருளைப் பெறுவதிலே கருத்தைச் செலுத்தி அதற்குரிய தீச்செயல்களையே நினைந்தும் செய்தும் ஒழுகும் தீமைப் பண்புடைய பொருட் பெண்டிர். பாங்கு - நற்பண்பு. வெறியேன் - நலம் ஒன்றும் இல்லாதேன். இவ்வகையில் திருவருட் பேற்றுக்குரிய தகுதி யொன்றும் இல்லாமை தேர்ந்து, “எந்தப் பரிசு கொண்டு அடைவேன்” என்று வருந்துகிறார்.

     இதனால் நினைவும் செயலும் பண்பு மாகியவற்றால் தாம் பாவியானமை விளம்பியவாறாம்.

     (7)