பக்கம் எண் :

344.

    கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன்
        கடிய மாதர்தம் கருக்குழி எனுமோர்
    பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன்
        பாவியேன் எந்தப் பரிசுகொண் டடைவேன்
    வெள்ள வார்சடை வித்தகப் பெருமான்
        வேண்ட நற்பொருள் விரித்துரைத் தோனே
    புள்ள லம்புதண் வாவிசூழ் தணிகைப்
        பொருப்ப மர்ந்திடும் புனித பூரணனே.

உரை:

     கங்கை யாற்றைத் தாங்கும் நீண்ட சடையையுடைய ஞானத் திருவுருவினனான சிவபெருமான் விரும்பிக் கேட்கப் பிரணவத்தின் நல்ல பொருளை விரியக் கூறிய முருகப் பெருமானே, நீர்ப் பறவைகள் தங்கியொலிக்கும் பொய்கைகள் சூழ்ந்த தணிகை மலையில் எழுந்தருளும் தூய்மையின் பரிபூரணமான பெருமானே, நெஞ்சிற் கள்ளம் நிறைந்து விடம் போல்பவனாகிய யான் விலக்குதற்குரிய மகளிருடைய கருத்தங்கும் குழி யெனப்படும் பள்ளத்தில் வீழ்கின்ற புலைத்தன்மையும் கொலைச் செயலுமுடைய பாவியாதலால் எவ்வகை நலத்தைக் கொண்டு உன் திருவடியை வந்து சேர்வேன்? எ. று.

     வெள்ளம் - கங்கையாறு; “வெள்ளந்தாழ் விரிசடையாய்” (சதகம்) என்று திருவாசகம் கூறுவது காண்க. வார் சடை - நீண்ட சடை. வித்தகன் - ஞானவான். ஞானிகட் கெல்லாம் முதல்வனாவது பற்றிச் சிவபெருமானை, “வித்தகப் பெருமான்” என்றும், பிரணவப் பொருளையுரைக்குமாறு சிவன் கேட்க உரைத்தமையால், “வித்தகப் பெருமான் வேண்ட நற்பொருள் விரித்துரைத் தோனே” என்றும் கூறுகின்றார். பொய்கையில் நீர்ப்பறவைகளில் வாழ்வ தியல்பாதலால், “புள்ளலம்பு தண் வாவி” என்று சிறப்பிக்கின்றார். வாவி - பொய்கை. தணிகைப் பொருப்பு - தணிகை மலை. புனித பூரணன் - தூய்மை யென்பது குறைவற நிறைந்தவன். குறைவற நிறைதலைப் பரிபூரணம் என்று வடசொல்லாலுரைப்பது வழக்கம். நெஞ்சிற் பொருந்திய கள்ளம் சொல்லிலும் செயலிலும் நிறைந்து வஞ்சிக்கும் இயல்பிற்றாதலால், அது தன்பால் உண்மை கண்டு, “கள்ள நெஞ்சினேன் நஞ்சினை யனையேன்” என வுரைக்கின்றார். கடி - நீக்குதற் பொருளில் வரும் உரிச்சொல். கருக்குழி எனும் ஓர் பள்ளம் என்பது பெண்மை யுறுப்பைக் குறிக்கின்றது. புலை கொலைகட்குக் காமம் காரணமாதலால், “புலையனேன் கொலையனேன்” எனவும்,

     இவற்றால் பாவவினை யுண்டாதல் பற்றிப் “பாவியேன்” எனவும் கூறுகின்றார். இவை திருவருட் பேற்றுக்குத் துணையாகாமையால், “எந்தப் பரிசு கொண்டடைவேன்” என விளம்புகிறார்.

     இதனால், கள்ளம் காமம் கொலை புலை ஆகிய பாவ காரணங்கள் திருவடிப் பேற்றுக்கு ஆகா எனத் தெரிவித்தவாறாம்.

     (8)