பக்கம் எண் :

345.

    மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன்
        மாதர் கண்களின் மயங்கிநின் றலைந்தேன்
    பத்தி என்பதோர் அணுவுமுற் றில்லேன்
        பாவியேன் எந்தப் பரிசுகொண் டடைவேன்
    பித்த நாயகன் அருள்திருப் பேறே
        பிரமன் மாலுக்கும் பேசரும் பொருளே
    தத்தை பாடுறும் பொழிற்செறி தணிகா
        சலத்தின் மேவிய தற்பர வொளியே.

உரை:

     பித்த நாயகனான சிவபெருமான் பெற்ற திருவருட் செல்வமாகிய முருகப் பெருமானே, பிரமன் திருமால் ஆகிய தேவர்களாற் புகழ்ந் தோதற் கரியவனே, கிளிகள் கூடியிருந்து பேசும் சோலைகள் செறிந்த தணிகை மலையில் எழுந்தருளிய தற்பரமாகிய ஞானவொளியே, உன்மத்த முற்ற நெஞ்சினை யுடையனாய்ப் பித்தேறியவர் போல் திரிந்து, மகளிர் கட்பார்வையால் காம மயக்கங் கொண்டு தெருக்களில் அலைந்தேனே யன்றிப் பத்தி யென்பதை ஓர் அணுவும் கொள்ளாமற் பாவியாகிய யான் எவ்வகை நலம் கொண்டு உன் திருவடியை அடைவேன், எ. று.

     பித்த நாயகன் - பித்தனாகிய தலைவன்; “ஒத்தொவ்வாதன செய்துழல்வார் ஒரு பித்தர் காணும் பெருமானடிகளே” (கடவூர்மயா) என்றும், “பித்தர்க்குப் பித்தனாய் நின்றான்” (புன்கூர். நீடூர்) என்றும் திருநாவுக்கரசரும், “பித்தா” (வெண்ணெய்) எனச் சுந்தரரும், “பெருந்துறைப் பெரும் பித்தனே” (கழுக்) எனத் திருவாதவூரரும் பிறரும் கூறுவதால், சிவனைப் “பித்த நாயகன்” என்று புகல்கின்றார். தன்பால் அன்பு கொண்டாரைப் பித்தேற்றிப் பித்தராக்குதலாற் சிவன் பித்தன் எனப்படுகின்றா ரென்றலும் உண்டு; “பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி” (திருவண்டப்) என்று பெரியோர் கூறுதல் காண்க. அருளுருவாகிய செல்வப் புதல்வன் என்பாராய், “அருள் திருப்பேறே” எனவும், பரஞானப் பொருளாய் உரையுணர்வு கடந்து நிற்பதால் பிரமன் திருமாலாகிய தேவர்கட்குப் பேச்சிறந்த பொருளாவான் எனற்குப் “பிரமன் மாலுக்கும் பேசரும் பொருள்” என்று பரவுகின்றார். தத்தை - கிளி. தன்னின் வேறில்லாத பரஞான வொளியாயவன் முருகன் என விளக்குவார், “தற்பர வொளியே” என விளம்புகிறார். மத்தம் - மயக்கம். “மத்த மனத்தொடு மாலிவன் என்ன” (சதக) என வருவது காண்க. பற்றிய பொருளல்லது வேறி யாதும் நினையாத மனநிலை மத்தமாம். பித்தர் - பித்துக் கொண்டவர். மத்தர் போலாது வாய் வந்தது பேசி நாணமின்றித் திரிபவர் பித்தர் என அறிக. காம விச்சை மிக்கு நல்லறிவு இழந்து வருந்தினமை தோன்ற, “மாதர் கண்களின் மயங்கி நின்றலைந்தேன்” எனகின்றார். பத்தி - பெற்றோர் பெரியோர் தெய்வங்கள் ஆகியோர் பாற் கொள்ளும் உயரிய அன்பு. மத்த நெஞ்சமும் பித்தர் செயலும், பத்தி யில்லாமையும் நற் பரிசல்ல வாகலின், “எந்தப் பரிசு கொண் டடைவேன்” என வருந்துகிறார்.

     இதனால், மத்தர் மனமும் பித்தர் செயலும் பத்தியின்மையும் திருவருட் பேற்றுக் காகாவெனக் கூறியவாறாம்.

     (9)