351. வன்னோயும் வஞ்சகர்தம் வன்சார்பும் வன்றுயரும்
என்னோயுங் கொண்டதனை எண்ணி இடிவேனோ
அன்னோ முறைபோகி ஐயா முறையேயோ
மன்னோ முறைதணிகை வாழ்வே முறையேயோ.
உரை: அருளரசே, தணிகையில் எழுந்தருளி அருள் வாழ்வளிக்கும் முருகப் பெருமானே, நீக்குதற்கரிய நோய்களும், வஞ்சக மக்களின் விலக்குதற்கரிய வலிய தொடர்பும், போக்குதற்கரிய துயரமும், இவற்றால் எய்தும் எல்லாவகை மனநோயும் கொண்டிருக்கும் எனது நிலைமையை எண்ணி மனம் மெலிகின்றேன்; முறைநெறி பிழையாத ஐயனே, எனக்கு இந்நிலை உண்டாவது முறையாகுமா? எ. று.
வன்மை - நீக்குதற்கரிய வலியுடைமை. வஞ்சகர் தொடர்பு எளிதில் எய்துவதாயினும் நீக்குதற்கு அரியதாதலால் அதனை, “வன்சார்பு” எனக் கூறுகின்றார். என்நோய் - எல்லா வகையான நோய். எத்துணை வளம் படைத்த உடம்பாயினும் நோயும் மனவேதனையும் எய்திய வழிக்கரைந்து மெலிந்து சோர்ந்தொழிவது இயல்பாதலால், “எண்ணி இடிவேனோ” எனப் புலம்புகின்றார். முறைபோகி - முறை பிறழ்தலின்றிக் கடை போகியவன். அன்னோ - ஐயோ. மன்னோ என்றவிடத்து ஓகாரம் அசை நிலை.
இதனால் நோயும் வஞ்சகர் தொடர்பும் மனத்தளரச்சியை எய்துவித்துக் கெடுக்கும் திறம் கூறியவாறாம். (5)
|