29. திருவருள் விழைதல்
அஃதாவது முருகப் பெருமானுடைய திருவருளை எய்த விரும்பும் உட்கோளை உரைத்தல். இதன்கண் திருவருட் பேறும், அதனைப் பெறாவிடில் எய்தும் தளர்ச்சியும், பெற்ற பெருமக்களைப் பேணும் திறமும் உரைக்கப் படுகின்றன.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம் 352. தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில்
சாமியே நினையேத்திக்
காணு வேனிலை அருளிவண் புன்மையில்
காலங்கள் கழிக்கின்றேன்
மாணு மன்பர்கள் என்சொலார் ஐயநீ
வந்தெனக் கருள்வாயேல்
நாணு வேன்அலன் நடுங்கலன் ஒடுங்கலன்
நாயினும் கடையேனே.
உரை: தாணுவாகிய சிவபெருமான் பெற்ற அருட் செல்வப் புதல்வனே, தணிகைப் பதியில் எழுந்தருளும் தலைவனே, உன்னை வழிபட்டு உன்னுடைய திருவருள் ஞானத்தை இங்குப் பெறுகின்றேனில்லை; புல்லிய நினைவு செயல்களில் காலத்தைக் கழிக்கின்றேன்; ஐயனே, நீ என் முன் வந்து எனக்கு அருள் புருகுவாயானால் மாண்புடைய நின் அன்புடைய தொண்டர்கள் யாதும் சொல்ல மாட்டார்கள்; நாயினும் கடையவனாகிய யானும் நாணுவதோ, நடுங்குவதோ, ஒடுங்குவதோ செய்ய மாட்டேன், எ. று.
தாணு - சிவனுக்குரிய பெயர்களி லொன்று; பிரமனும் திருமாலும் பிணங்கிய காலத்துச் சிவபெருமான் இருவர்க்கும் இடையே அழற்றூணாய் நின்று இருவரும் அடியும் முடியும் காணாவாறு நிமிர்ந்து விளங்கியதனால், “தாணு” எனப்பட்டார். இவ்வரலாற்றை, “மூவுலகுருவ இருவர் கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே” (வாழாப்) என்று மாணிக்கவாசகர் குறிப்பார். அவரே சிவனை நோக்கி, “எம்பெருமானே தாணுவே அழிந்தேன் நின்னை நினைந்துருகும் தன்மை” (எண்ணப்) என்பது ஈண்டு நோக்கத் தக்கது. சிவனுக்குச் செல்வ மகனாய்த் திருவருளே உருவாக அமைந்தமை பற்றி முருகப் பெருமானைத் “தாணு ஈன்றருள் செல்வமே” என்று பரவுகின்றார். சாமி - தலைவன். “காணுவேனிலை யருள்” என்றவிடத்துக் காண்டல், ஞானக்கண் கொண்டு திருவருள் உருவாகிய முருகனைக் காண்பதாம். அக்காட்சி அன்பால் வழிபட்டுப் பெறுவதாதலால், “நினை ஏத்திக் காணுவேனிலை” என்றும், அருட் டிருமேனியை, 'அருள்' என்றும் இசைக்கின்றார். அல்லாத உலகியற் பொருள்களைக் கண்டு வாழ்நாளை வீணாக்குதலை நினைத்து, “புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன்” என்று கூறுகிறார். இவ்வாறே திருவாதவூரரும், “என் புன்மைகளாற் காணுமதொழிந்தேன்” என்கின்றார். புன்மை - உலகியற் பொருள் நுகர்ச்சிகள். என் புன்மைக் கிரங்கி நீயே அருள் கொண்டு எனக்கு உனது அருளின்பக் காட்சியை நல்குவாயேல், உனக்கு உண்மையன்புடையார் இடை நின்று யாதும் சொல்லுவாரன்றோ என்பாராய், “மாணும் அன்பர்கள் சொலார்” என வுரைக்கின்றார். என்சொலார் - என்னும் சொல்லுவர். உம்மை விகாரத்தால் தொக்கது. என்னும் - எல்லாம்; “என்னுடையரேனும் இலர்” (குறள் - 430) என்பது போல. ஞானக்கண் பெற்று நோக்குமிடத்து முன்னைப் புன்மைகள் நினைவிற்றோன்றி நாணம் விளைவிக்கு மாகலின் மணிவாசகர், “நீயினி வரினும் காணவும் நாணுவன்”(எண்ணப். 5) என்றாராக, நம் வடலூர் வள்ளல், நீ வந்தருள்வாயாயின், நாணமோ, அதனால் மனத்தில் ஒடுக்கமோ நடுக்கமோ கொள்ளமாட்டேன் என்பாராய், “நாணுவேனலன் நடுங்கலன் ஒடுங்கலன்” எனவும், அதற்குக் காரணம், யான் நாயினும் கீழ்ப்பட்டவன் என்பார், “நாயினும் கடையேன்” எனவும் இயம்புகின்றார்.
இதனால், முருகப் பெருமானைச் சிந்தைக்கண் நினைந்து வழிபட்டு அவனது அருட்காட்சி பெறாமையை எண்ணி வருந்தியவாறாம். (1)
|