3524. அன்னையே என்றன் அப்பனே திருச்சிற்
றம்பலத் தமுதனே எனநான்
உன்னையே கருதி உன்பணி புரிந்திங்
குலகிலே கருணைஎன் பதுதான்
என்னையே நிலையாய் இருத்தஉள் வருந்தி
இருக்கின்றேன் என்உள மெலிவும்
மன்னும்உன் உடம்பின் மெலிவும்நான் இருக்கும்
வண்ணமும் திருவுளம் அறியும்.
உரை: எனக்குத் தாயாகியவனே, என்னுடைய தந்தையே, திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளும் அமுது போல்பவனே என்று யான் உன்னை நினைந்து உன் திருவருட் பணியையே செய்து கொண்டு இவ்வுலகில் இரக்கப் பண்பு என்பது என்பாலே நிலையாய் இருத்தல் வேண்டுமென மனம் வருந்திக் கொண்டிருக்கின்றேன்; என் மனத்தின் மெலிவும் பெரிய இவ்வுடம்பின் மெலிவும் நான் இருக்கும் திறமும் தேவரீருடைய திருவுள்ளம் நன்கு அறியும். எ.று.
உலகுயிர்களைத் தாய் தந்தையாய் நின்று தலையளிக்கும் தலைவனாதலின் சிவனை, “அன்னையே என்றன் அப்பனே” என்றும், திருச்சிற்றம்பலத்து திருநடனக் காட்சி காண்பார்க்கு அமுதம் போல் இனிமை செய்வதாதலின், “திருச்சிற்றம்பலத்து அமுதனே” என்றும் புகல்கின்றார். கருதுதல் - ஈங்கு நினைத்தல் மேற்று. கருவி கரணங்களின் செயல் அனைத்தும் திருவருட் செயல் என நினைந்திருத்தல், பணி புரிதலாகும். இதனை இறைப் பணி எனச் சாத்திரங்கள் கூறுகின்றன. சூழ் நிலை வேறுபாடுகளால் தம் மனத்தின்கண் நிறைந்திருக்கும் அருளிரக்கப் பண்பு நீங்குதல் கூடாது என விரும்புகின்றாராதலின், “உலகிலே கருணை என்பதுதான் என்னையே நிலையாய் இருத்த உள்வருத்தி இருக்கின்றேன்” என்று இயம்புகின்றார். அதன் அருமைப்பாடு நினைந்து அறிந்து உள்ளமும் உடலும் உயிரும் உருகி மெலிகின்றாராதலின், அதனை “என்னுள மெலிவும் மன்னும் என்னுடம்பின் மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்” என விளம்புகின்றார்.
இதனால், உயிரிரக்கமாகிய அருளறம் தன்பால் நிறைபெற வேண்டும் என்று வள்ளற் பெருமான் விழைந்த திறம் விளம்பியவாறாம். (115)
|