3527. திருவளர் திருஅம் பலத்திலே அந்நாள்
செப்பிய மெய்ம்மொழிப் பொருளும்
உருவளர் திருமந் திரத்திரு முறையால்
உணர்த்தியே மெய்ம்மொழிப் பொருளும்
கருவளர் அடியேன் உளத்திலே நின்று
காட்டிய மெய்ம்மொழிப் பொருளும்
மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும்
வண்ணமும் திருவுளம் அறியும்.
உரை: சிவஞானச் செல்வம் வளர்கின்ற தில்லையம்பலத்திலே அந்நாளில் உலகெலாம் எனச் செப்பிய மெய்ம்மை மொழியின் நிறை பொருளையும் ஞானவுருத் தந்து திகழ்விக்கின்ற திருமந்திரம் என்னும் திருமுறை வாயிலாக உலகிற்கு உணர்த்திய மெய்ம்மை மொழியின் பொருளையும் கருத் தங்கிப் பிறந்து வருகின்ற அடியவனாகிய எனது மனத்திலே உணர்வாய் நின்று உணர்த்திய மெய்ம்மொழியின் பொருளையும் உள்ளத்தில் கலந்து விரும்பி நான் இருக்கும் திறத்தைத் தேவரீருடைய திருவுள்ளம் நன்கு அறியுமன்றோ. எ.று.
திருவளர் திருவம்பலம் - சிவஞானச் செல்வம் மிகுகின்ற தில்லைப் பொன்னம்பலத்தைத் ‘திருவளர் திருவம்பலம்’ எனப் பாராட்டுகின்றார். சேக்கிழார் பெருமான் தில்லையம்பலத்தில் இருந்து திருத்தொண்டர் புராணம் தொடங்கிய காலத்தில் உலகெலாம் என முதல் எடுத்துக் கொடுக்கும் வரலாற்றுக் குறிப்பும் அதன் மெய்ப்பொருளும் குறிப்பாராய், “அந்நாள் செப்பிய மெய்ம்மொழிப் பொருளும்” என மொழிகின்றார். திருமந்திரத்தை ஓதுவதால் உளதாகும் சிவஞானத் திருவுருவ நலத்தை, “உருவளர் திருமந்திரம்” எனவும், அஃது ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப் பட்டு இருப்பதைப்பற்றி, “திருமந்திரத் திருமுறை” எனவும், அதன்கண் உணர்த்தப்படும் சமய ஞானப் பொருளை “திருமுறையால் உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும் எனவும் உரைக்கின்றார். திருவருட் சிந்தையால் உள்ளத்தில் விளங்கிய சிவஞானக் கருத்துக்களை “கருவளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய்ம்மொழிப் பொருளும் உள்ளத்தில் தோய்ந்து இன்பம் செய்தலால், அவற்றின் மெய்ம்மை யுணர்ந்து விரும்பியிருக்கும் தமது மனநிலையை, “மருவி என்னுளத்தே நம்பி நான் இருக்கும் வண்ணம்” என்று தெரிவிக்கின்றார்.
இதனால், வள்ளற் பெருமான் உள்ளத்தில் கொண்டிருக்கின்ற மெய்ம்மொழிப் பொருள்கள் இவை யென விளக்கியவாறாம். (118)
|