பக்கம் எண் :

353.

    கடைப்பட் டேங்குமிந் நாயினுக் கருள்தரக்
        கடவுள்நீ வருவாயேல்
    மடைப்பட் டோங்கிய வன்பகத் தொண்டர்கள்
        வந்துனைத் தடுப்பாரேல்
    தடைப்பட் டாயெனில் என்செய்வே னென்செய்வேன்
        தளர்வது தவிரேனே
    அடைப்பட் டோங்கிய வயல்திருத் தணிகையம்
        பதியமர்ந் திடுதேவே.

உரை:

     வரப்புகளால் நீர் அடைக்கப்பட்டு வித்தியவை இனிது வளரும் வயல்களை யுடைய திருத்தணிகைப் பதியில் எழுந்தருளும் தேவர் பெருமானே, கீழ்மை யுற்றுக் கிடக்கும் நாயின் தன்மையை யுடைய எனக்கு அருள் புரிய வெண்ணிக் கடவுளாகிய நீ என்பால் வருகுவையாயின், மனத்தின்கண் மடையிட்டுத் தடுக்க நிறையும் நீர் போல அன்பு பெருகிய தொண்டர்கள் வந்து தடுப்பாராயின், அதனால் நீ தடைப்படுவாயாயின் யான் என்ன செய்வேன்; மிகவும் சோர்ந்து கெடுவேன், எ. று.

     நிறையும் நீர் தேங்கி நிற்றல் வேண்டி வழிந்தோடும் உடைப்புக்களை அடைத்து வித்தியது இனிது விளைவிப்பது பற்றி, “அடைப்பட் டோங்கிய வயல்” என்று தணிகையிலுள்ள வயல்களைச் சிறப்பிக்கின்றார். நீர் அடை பட்டு நிறைந்திருக்கும் வயல்கள் போல நிறைந்த அன்பர்களால் சூழப்பட்டிருக்கும் முருகப்பெருமானது திருவோலக்கம் உளதென்பது குறிப்பு. சொற்செயல்களால் சிறந்தோர்க்குச் சிறப்பு செய்வது காண உவகை யுறும் மக்கள் இழிந்தார்க்கு அதனைச் செய்வாருளராயின் தடை செய்ய, அதனால் நினைவு செயல்களால் கீழ்மையுற்ற எனக்கு நீ அருள் செய்வதாயின், நின்பால் அன்புடைய தொண்டர்கள் நின்னைத் தடுப்பர் என்பார், “கடைப்பட் டோங்குமிந் நாயினுக்கருள்தரக் கடவுள் நீ வருவாயேல், மடைப்பட்டோங்கிய அன்பகத் தொண்டர்கள் வந்துனைத் தடுப்பாரேல்” என்றும், அன்புப் பிடியில் அகப்படும் இயல்பினால் அவர்களின் தடைக்குட்பட்டு நீ அருள் புரியாதொழியலாம் என்பாராய்த் “தடைப்பட்டா யெனில்” என்றும் இயம்புகிறார். தொண்டர்களின் அன்புப் பெருக்கத்தை “மடைப்பட்டோங்கிய அன்பகத் தொண்டர்கள்” எனவும் தடுக்க மாட்டார்கள். நீயும் தடைப்படாய் என்ற குறிப்புத் தோன்றத் “தடுப்பாரேல், தடைப்பட்டாயெனில்” எனவும் கூறுகின்றார். இறைவன்பால் பேரன்புடையவர் உயர்ந்தார் இழிந்தார் என்ற வேறுபாடு கருதாது எல்லோரும் எவ்வுயிரும் தாம் பெற்ற பேறு பெறுக என விழைவரே யன்றி வேறு எண்ணா ராதலின், “தடுப்பாரேல்” எனவும், முருகப் பெருமானும் அப்பெற்றிய னாதலால், “தடைப்பட்டா யெனில்” எனவும் உரைக்கின்றார். உலகியல் நிகழ்ச்சிகளைக் கண்டு பயின்ற தன்மையால் தொண்டர்கள் தடுப்பாரோ என்று வள்ளற் பெருமான் அஞ்சுகின்றார். முருகப் பெருமான் அன்பர்களால் தடைப்பட்டு அருளாதொழிவானாயின் வேறு செயலின்மையின், “என்செய்வேன் என்செய்வேன்” என அடுக்கியும், சோர்ந்து கெடுவதொழிய நிகழ்வது பிறிது யாதும் இல்லை யென்றற்குத் “தளர்வது தவிரேனே” என மொழிந்தும் தமது கையறவை விளம்புகின்றார்.

     இதனால் திருவருள் பெறாவிடில் சோர்ந்து கெடும் நிலைமையை எடுத்தோதியவாறாம்.

     (2)