3530. வாட்டமோ டிருந்த சிறியனேன் தனது
வாட்டமும் மாயையா திகளின்
ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத் திரங்கி
என்னைஓர் பொருள்என மதித்தே
தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள்
செலுத்திய திருச்சிலம் பொலிநான்
கேட்டபோ திருந்த கிளர்ச்சியும் இந்நாள்
கிலேசமுந் திருவுளம் அறியும்.
உரை: வருத்தம் மிக்குற்றமையால் சிறுமை யுடையவனாகிய எனது வாட்டத்தையும், உலகியல் மாயை முதலியவற்றின் கூட்டத்தையும், என்னை யடையாமல் தவிர்க்கும் பொருட்டுத் திருவுள்ளத்தில் இரக்கமுற்று என்னையும் ஒருபொருளென எண்ணி எழுதுதற்கரிய புகழ் பொருந்திய திருவடி யிரண்டின் கண்ணும் அணிந்த சிலம்பின் ஒலி கேட்பக் கேட்ட போது எனக்கு உளதாகிய உள்ளக் கிளர்ச்சியும் இப்பொழுது அஃதின்றி எய்தி யிருக்கும் மனத்தளர்ச்சியும் தேவரீருடைய திருவுள்ளம் நன்கு அறியும். எ.று.
திருவருள் ஞானப் பேறு எய்தாமையால் அறிவு சோர்ந்து மனம் தளர்ந்திருந்த தமது நிலையை, “வாட்டமோடு இருந்த சிறியனேன்” என வள்ளற் பெருமான் வனைந்து உரைக்கின்றார். மாயை யாதிகள் - மலம், மாயை, கன்மங்கள். ஈட்டம் - கூட்டம்; திரளுமாம். தமது சிறுமையும் மாயையாதிகளின் கலக்கமும் தனது வலி போக்கி மெலிவு நல்கிச் சோர்வித்த போது சிவபெருமானுடைய திருவடிச் சிலம்போசை கேட்டு மகிழ்ந்த நலத்தை, “திருவுளத் திரங்கி என்னை ஓர்பொருள் என மதித்தே தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள் செலுத்திய திருச்சிலம்பொலி நான் கேட்ட போதிருந்த கிளர்ச்சியும்” என மொழிகின்றார். பிற்றை நாட்களில் அச்சிலம்போசை கேளாமையால் உண்டாகிய வருத்தத்தை “இந்நாள் கிலேசம்” என்றும், அதுவும் இறைவன் நன்கு அறிந்தது என்றற்கு, “திருவுளம் அறியும்” என்றும் தெரிவிக்கின்றார். கிலேசம் - வருத்தம்.
இதனால், திருவடிச் சிலம்போசை கேட்டு வள்ளற் பெருமான் தமது உள்ளத்தில் கிளர்ச்சி கொண்ட திறம் குறித்து அருளியவாறாம். (121)
|