3534. அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென்
அமுதநின் மேல்வைத்த காதல்
நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள்
நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
படியஎன் தன்னால் சொலமுடி யாது
பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன்
செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம்
திருவுளங் கண்டதே எந்தாய்.
உரை: திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளி யுள்ள எனக்கு அமுதமாகியவனே; அடியேனுடைய உள்ளம் நின்பாற் கொண்ட காதல் நெடியவாகிய கடல் ஏழினும் பெரிதாகும்; எனக்கு இப்போது நிகழ்கின்ற ஆர்வமும் விறுவிறுப்பும் முற்றவும் என்னால் சொல்ல முடியாது; பிறபொருள்களைப் பார்க்கும் செயலின்றி உன்னையே பார்த்திருக்கின்றேன்; குற்றமுடையவனாகிய யான் கொண்டிருக்கும் எண்ணங்கள் எல்லாவற்றையும் தேவரீருடைய திருவுள்ளம் நன்கு அறியும். எ.று.
சிவபெருமானுடைய திருவருளின் சிதையாத ஞான வின்பம், தெளிந்த அமுதினும் இனிமை செய்வது பற்றி, “திருச்சிற்றம்பலத்தென் அமுத” எனச் செப்புகின்றார்.. தில்லையம்பலத்துக் கூத்தப் பெருமான் செய்யும் திருவருள் ஞானமாதல் பற்றித் திருச்சிற்றம்பலத்தை விதந்து ஓதுகின்றார். சிவபெருமான்பால் கொண்ட ஆராக் காதலின் அளவிடற்கரிய பெருமையைக் குறித்தற்கு, “காதல் நெடிய ஏழ் கடலில் பெரியது” எனக் கிளந்து உரைக்கின்றார். ஆவல் - பேரன்பு. விரைவு - ஆசை விருப்பு மிகுதியால் மனத்திலும் உடலிலும் உண்டாகும் துடிப்பு. படிய - முற்றவும்; அழகிய உருவம் உடையவனே என்று பொருள் புலன்கள் மேற் செல்லும் ஆசை ஐந்தினையும் ஒருமுகப் படுத்தி நோக்குவதை, “பார்ப்பறப் பார்த்திருக்கின்றேன்” என்று கூறுகின்றார். செடி - குற்றம். வண்ணங்கள் - இயல்புகள்.
இதனால், கூத்தப் பெருமானுடைய திருவருள் இன்பத்தில் வள்ளற் பெருமான் கொண்ட காதலின் பெருமை கூறியவாறாம். (125)
|