3535. பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப்
பகல்வரை அடைந்தவை எல்லாம்
உன்னிநின் றுரைத்தால் உலப்புறா ததனால்
ஒருசில உரைத்தனன் எனினும்
என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும்
இயல்புறப் புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும்நீ அறிந்த
வண்ணமே வகுப்பதென் நினக்கே.
உரை: பன்னிரண்டாம் வயது தொடங்கி இன்றைய பகல் பொழுது வரை நான் பெற்ற அனுபவங்கள் எல்லாவற்றையும் எண்ணி யுரைத்தால் அது முடிவுறாது; ஆதலால் ஒருசிலவற்றையே இதுகாறும் எடுத்துரைத்தேன்; என்றாலும் என்னுள்ளத்தின் அகத்தும், புறத்தும், உட்புறத்தும், புறப்புறத்தும் இயல்பாகவே விளக்கமுற நிலை பெற்று எல்லாவற்றையும் அறிந்தாங்கு முறை செய்யும் பரஞ்சோதியாகிய உனக்கு உரைப்பது என்னையோ. எ.று.
தமக்குப் பன்னிரண்டாம் ஆண்டு தொடங்கிச் சிவ நினைவும், சிவ ஒழுக்கமும் தமக்கு உளவாயினமையும், அவற்றின் வழி உண்டாகிய அனுபவங்களையும் ஊன்றி நின்று எண்ணி நினைவு கூர்ந்து உரைப்பதென்றால் அது முற்றவும் முடியாத தொன்று என்பாராய், “பன்னிரண்டாண்டு தொடங்கி நான் இற்றைப் பகல் வரை அடைந்தவை யெல்லாம் உன்னி நின்றுரைத்தால் உலப்புறாது” என்று கூறுகின்றார். உலப்புறுதல் - முடிவுறுதல். உன்னி யுரைத்தல் - நினைவு கூர்ந்து சொல்லுதல். ஒருசில என்றவிடத்து ஒருமை விகுதி குறித்து நின்றது. புறப்பொருட்கட்கு உட்புறம், புறப்புறம் என இரண்டு உண்மையின், “உட்புறத்தும் புறப்புறத்தினும்” எனப் பிரித்து ஓதுகின்றார். பொருள்களின் எல்லாக் கூறுகளிலும் சிவத்தின் அருள் ஒளி பரந்து நிற்றலின், “இயல்புற விளங்கி மன்னிய சோதி” எனக் குறிக்கின்றார். தன்னியல்பில் எல்லாவற்றையும் முற்ற அறிந்து கொள்ளும் பேரறிவினனாதலால், “இயல்புற யாவும் நீ அறிந்த வண்ணம்” என இயம்புகின்றார். எல்லாவற்றையும் முற்ற அறிந்து கொள்ளும் முற்றறிவு உடைய முதல்வனுக்கு வகுத்தும் தொகுத்து முரைப்பது வேண்டாதது என்றற்கு, “நினக்கு வகுப்பது என்” என வழுத்துகின்றார். வகுத்தல் - ஈண்டு உரைத்தல் மேற்று.
இதனால், வள்ளற் பெருமான் தனக்குப் பன்னிரண்டாம் வயது தொடங்கி எய்திய அனுபவம் அனைத்தையும் இறைவன் அறிந்துள்ளவை என்று எடுத்தோதியவாறாம். (126)
|