பக்கம் எண் :

354.

    தேவ ரேமுதல் உலகங்கள் யாவையும்
        சிருட்டிஆ தியசெய்யும்
    மூவ ரேயெதிர் வருகினும் மதித்திடேன்
        முருகநின் பெயர்சொல்வோர்
    யாவ ரேனும்என் குடிமுழு தாண்டெனை
        அளித்தவர் அவரேகாண்
    தாவ நாடொணாத் தணிகையம் பதியில்வாழ்
        சண்முகப் பெருமானே.

உரை:

     கெடுவது மனத்தாலும் நினைக்க வொண்ணாத தணிகைப் பதியில் எழுந்தருளுகின்ற சண்முகப் பெருமானே, தேவருலகம் முதல் எல்லா உலகங்களையும் படைத்தல் காத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் மூவரே வந்து எனக்கு எதிரில் நின்றாலும், யான் மதிக்கமாட்டேன்; அதே நிலையில் முருகப் பெருமான் பெயரை ஓதுவோர் எத்துணை இழிந்தவராயினும் என் குடி முழுதும் ஆட்கொண்டு என்னை வாழ்வித்தவர்கள் அவரே யாவர், எ. று.

     ஆவதும் அழிவதும் இயல்பாகவுள்ள உலகில் ஆக்கத்தைக் காணும் உள்ளம் இதற்கு அழிவு வருமோ என்று எண்ணி அஞ்சுவது மரபாதலால் தணிகைப் பதியின்கண் வளமும் பெருமையும் காண்போர் அவ்வாறு எண்ணார் என்பதற்குத் “தாவ நாடொணாத் தணிகையம்பதி” என்று புகழ்கின்றார். அறுமுக முடையனாதலால், “சண்முகப் பெருமானே” என்கின்றார். சட்முகம் - சண்முகம் என வந்தது; வடநூற் புணர்ப்பு. மண்ணுலகில் புண்ணியம் செய்தாற்கென அமைந்தது தேவருலகம்; ஆதலால் “தேவரே முதல் உலகங்கள் யாவையும்” என்று சிறப்பிக்கின்றார். சிருட்டி - படைத்தல். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல் மூன்றையும் முறையே பிரமன், மால், உருத்திரன் ஆகிய மூவரும் தனித்தனியே செய்யும் தேவராவர். அவர்கள் மூவரும் முத்தொழிலுக்கும் உரியவரேயன்றித் தம்மை வழிபடுவார்க்கு வீடு பேறு அளிக்கும் சால்பு உடையவரல்லராதலால், “மூவரே எதிர் வருகினும் மதித்திடேன்” என்று மொழிகின்றார். எல்லாம் வல்லவனாகிய முருகக் கடவுள்பால் மெய்யன்புடையவரல்லது பிறர் அப்பெருமான் பெயரை ஓத மாட்டார்கள்; அதனால் தான், “முருக நின் பெயர் சொல்லுவோர்” என எடுத்து மொழிந்து அவர் கீழ்க்குலத்தவராயினும் அவர்களைத் தம்மையும் தம்குடிப் பிறந்தாரையும் ஆண்டருளும் முருகப் பெருமானாகவே கருதி வழிபடுவேன் என்பார், “யாவரேனும் என் குடி முழு தாண்டெனை அளித்தவர் அவரே காண்” என்று தெரிவிக்கின்றார். யாவரேனும் என்றதனால் கீழ்க் குலத்தவரையும் உளப்படுத்தமை அறிக.

     இதனால் முருகனடியாரல்லது தேவர்களும் தம்மால் மதிக்கப்படாரென்ற உட்கோள் உரைத்தவாறாம்.

     (3)