பக்கம் எண் :

3541.

     என்னுயிர் காத்தல் கடன்உனக் கடியேன்
          இசைத்தவிண் ணப்பம்ஏற் றருளி
     உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள்
          உறுகண்மற் றிவைஎலாம் ஒழித்தே
     நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம்
          நிரப்பியாட் கொள்ளுதல் வேண்டும்
     மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே
          வள்ளலே சிற்சபை வாழ்வே.

உரை:

     நிலைபெற்ற பொற் சபையில் பொலிந்து தோன்றுகின்ற மாணிக்க மணி போல்பவனே; அருள் வள்ளலே, ஞான சபையையுடைய செல்வனே; எனது உயிரைக் காப்பது எல்லாம் வல்ல முதல்வனாகிய உனக்குக் கடமையாகும்; யான் உனக்கு அடிமையாயினேன்; யான் இதுகாறும் உரைத்த விண்ணப்பத்தைத் திருவுள்ளத்தில் ஏற்றுக் கொண்டு உன்னையே நினைந்து ஒழுகும் என் மனத்திற் றோன்றும் அச்சம், துயர்கள், தீங்குகள் முதலிய இவற்றை யெல்லாம் போக்கி நினது திருவருளாகிய ஞான வமுதத்தை நல்கி என்னுடைய எண்ணங்களை நிறைவு செய்து என்னையும் ஆட்கொள்ளுதல் வேண்டும். எ.று.

     உயிர், மலமாயை கன்மங்களால் பிணிப்புண்டு சிற்றறிவும் சிறுதொழிலும் உடையதாதலின், அருட் பெரும் பரம்பொருளாகிய சிவத்துக்குக் காத்தல் கடமையாதலால், “என்னுயிர் காத்தல் கடன் உனக்கு” என வுரைக்கின்றார். மல மாயைகளால் பிணிப்புண்டு அவற்றின் வழி ஒழுகுதல் பற்றித் தன்னை, “அடியேன்” என்கின்றார். இசைத்தல் - சொல்லுதல். தான் உலகிற்கு அடிமையாயினும் முதல்வனாகிய சிவனை வள்ளற் பெருமான் எண்ணிய வண்ணம் இருக்குமாறு தோன்ற, “உன்னும் என்னுள்ளம்” என உரைக்கின்றார். நல்ஞானப் பேற்றுக்கும் நற்செயல்களுக்கும் அச்சம் இடர் உறுகண் முதலியன தடையாதலின், “உறும் பயம் இடர்கள் மற்றிவை யெலாம் ஒழித்து” என உரைக்கின்றார். மீளவும் அத்தடைகள் புகுந்து தீது செய்யா வண்ணம் நினது திருவருள் ஞானத்தை அளித்து அருளுதல் வேண்டும் என்பாராய், “நின் அருள் அமுதம் அளித்து” எனவும், “எனது எண்ணம் நிரப்பி ஆட்கொள்ளுதல் வேண்டும்” எனவும் கூறுகின்றார்.

     இதனால், தமது விண்ணப்பத்தின் பொருளை முடிந்தது முடிந்து மொழிந்தவாறாம்.

     (132)