3542. பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும்
பற்றறத் தவிர்த்தருள் இனிநான்
தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம்
தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ
புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும்
பொற்சபை அண்ணலே கருணை
வரிக்கனேர் மடந்தை பாகனே சிவனே
வள்ளலே சிற்சபை வாழ்வே.
உரை: தில்லைப் பொன்னம்பலத்தில் எழுந்தருளும் தலைவனே! கருணை நிறைந்து செவ்வரிப் பரந்த கண்களையுடைய மடந்தையாகிய உமாதேவியை ஒருபாகத்தே உடையவனே; சிவபெருமானே; அருள் வழங்கும் வள்ளலே, ஞான சபைச் செல்வனே, என்னை யலைக்கும் அச்ச வகைகளைப் போக்கிக் கொண்டிலேன்; ஆதலால், அது காரணமாக உண்டாகும் இடர்களையும் வெவ்விய துன்பங்களையும் முற்றவும் போக்கி அருள்வாயாக; நான் இனியும் இவற்றின் கொடுமையைத் தாங்க மாட்டேன்; ஒருசிறிதும் தாங்க மாட்டேன்; மனத்திலும் பொறுக்க மாட்டேன்;
ஐயோ, அவலத்தைச் செய்கின்ற வருத்தத்தை யகற்றி என்னை ஆட்கொண்டு அருளுதல் வேண்டும். எ.று.
தில்லையம்பலம் பொன் வேய்ந்திருப்பது பற்றி, “பொற் சபை” எனவும், ஞானத் திருக்கூத்து நிகழ்தலால், “சிற்சபை” எனவும் வழங்கும். மகளிர் கண்களில் செவ்வரி பரந்து அழகு செய்தல் பற்றி உமாதேவியை, “வரிக்கணேர் மடந்தை” என வழுத்துகின்றார். மங்கை பங்கனாதல் பற்றி, “மடந்தை பாகனே” எனப் பரவுகின்றார். இன்பம் செய்தலின் “சிவனே” என்கின்றார். பரித்தல் - போக்குதல்; வேரொடு களைதலுமாம். மனத்தி லுண்டாகும் அச்சம் காரணமாகப் பல்வகை இடர்களும் வெவ்விய துயர்களும் உளவாதலின், “இடரும் வெந்துயரும் பற்றறத் தவிர்த்தருள்க” என்று கூறுகின்றார். இவற்றைத் தாங்க மாட்டாத எல்லைக்கண் தான் இருப்பதை உணர்த்துதற்கு, “இனி நான் தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன், உள்ளம் தரிக்கிலேன் தரிக்கிலேன்” என அறிவிக்கின்றார். கிலேசம் - துன்பம்; குற்றமுமாம்.
இதனால், தமது துயரம் பொறுக்க மாட்டாத நிலைமையைப் புகன்றவாறாம். (133)
|