14. மாயையின் விளக்கம்
அஃதாவது, உலகியல் மாயைக்கும் தமக்கும் உண்டான தொடர்பை எடுத்தோதித் தம்மை யாண்டருள வேண்டு மென்பது. இதன்கண், தமது சிறுமையும் எளிமையும் நோக்கிச் சிவபெருமானாகிய முதல்வன் பரையாகிய செவிலி கையில் ஈந்து வளர்க்குமாறு தந்ததும், அவள் தனது மகள் கையில் தந்ததும், அம்மகள் நீலியாகிய சத்திபால் கொடுத்ததும், அச்சத்தி தத்துவங்களாகிய மகளிர் கையில் கொடுத்து வளர்க்கச் செய்ததும், முடிவில் தாம் செவிலியால் பொத்தைத் தொட்டிலில் இருப்பித்ததும் பிறவும் எடுத்துரைக்கின்றார். இயல்பிலேயே ஆன்மாவாகிய தன்னைச் சித்துப் பொருளென எண்ணாது பிறிதெனக் கருதி, காமம் முதலிய கொடியவர்களிடையில் இருந்து வளரச் செய்தால் அது கூடாது; இறைவனாகிய நீ நற்றாயாகிய தேவியொடு புகுந்து இடர் தீர்த்து ஞானம் நல்கி மெய்த் தவநெறியில் விடுத்து மண்ணும் விண்ணும் மதிக்கத் தம்மை வாழ வைத்தல் வேண்டுமென வள்ளற் பெருமான் முறையிடுகின்றார்.
இதன்கண், தந்தையாகிய இறைவன் தம்மை வளர்க்குமாறு பரையாகிய செவிலியின் கையில் ஒப்புவித்தனன் என்றும், அச்செவிலியோ என்றால், தம்மை யாதரிக்கவும் மாட்டாள் அயர்ந்திருக்கவும் மாட்டாள் என்றும், அதன் மேலும் செவிலியானவள் தம் மகளிடம் தம்மை ஒப்புவித்தாள் என்றும், அம்மகளோ தம்மை நீலிபால் கொடுத்தாள் என்றும், அந்நீலியோ தன்புடை யாடும் தத்துவ மடவார் கையில் இருத்தினாள் என்றும், அம்மடவார்களோ எனில், தனித் தனியாகத் தம்மையெடுத்து அச்சுறுத்துகிறார்கள் என்றும், சிலசமயம் அவர்கள் தம்மைக் கவனிக்காமல் விளையாட்டயர்கிறார்கள் என்றும், தம் அருமையை அவர்கள் அறியுமாறில்லை என்றும், தாம் தும்மினாலும் அழுதாலும் செவிலி கேளாதவள் போல் இருக்கிறாள் என்றும், வயிரத்தொட்டில்கள் தங்கத் தொட்டில்கள் பல இருந்திடவும், பொத்தைத் தொட்டிலில் செவிலி தம்மைக் கிடத்தினாள் என்றும், எல்லாம் வல்ல இறைவன் பெற்ற பிள்ளையாகிய தமக்கு இது தகுமா என்றும், செவிலி தம்மைக் குறையாத் திருமதியாளர் என்று கருதாமல் தேய்ந்திடு மதியினார் என்று எண்ணிக் காமமாதி யவரால் பயப்படுத்தினாள் என்றும், செவிலி கையில் தம்மைத் தந்தது சாலும் என்றும், இனியாவது, இறைவனும் இறைவனிடத்தினின்றும் எஞ்ஞான்றும் பிரியாத தம் நற்றாயாகிய ஞான ஆனந்தவல்லியும் கருணை கூர்ந்து எழுந்தருளி வந்து தமது இடர் தீர்த்து, “இன்னமுதம் அனைத்தையும் அருத்தி ஊனம் ஒன்றில்லா தோங்கும் மெய்த்தலத்தில் உறப் புரிந்து” தம்மை என்றென்றும் பிரியாமல் “வானமும் புவியும் மதிக்க வாழ்ந்து அருள்வார்களாக” என்று இரங்குதல் காண்க வெனப் பாலகிருஷ்ண பிள்ளையவர்கள் தொகுப்புரைப்பது காண்க.
எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 3543. திடுக்கற எனைத்தான் வளர்த்திடப் பரையாம்
செவிலிபாற் சேர்த்தனை அவளோ
எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள்
என்செய்வேன் இன்னும்என் னிடைப்பால்
மடுக்கநற் றாயும் வந்திலள் நீயும்
வந்தெனைப் பார்த்திலை அந்தோ
தடுக்கருங் கருணைத் தந்தையே தளர்ந்தேன்
தனையனேன் தளர்ந்திடல் அழகோ.
உரை: மலவிருளில் செயலின்றிக் கிடந்த என்னைத் திடுக்கிடாதபடி வளர்த்தல் வேண்டிப் பரை யெனப்படும் சிவசத்தியாகிய செவிலி கையில் விடுத்தாய்; அவள் என்னைத் தன் கையில் எடுக்கவும் விரும்பாமல் என்னை ஓரிடத்தில் இருக்கவும் விடாமல் அலைக்கின்றாள். நான் செய்வதறியாது வருந்துகிறேன்; இங்ஙனமாகியும் எனக்கு வேண்டும் பால் உணவைத் தரவும் நற்றாயாகிய அருட்சத்தி தானும் வருகின்றாள் இல்லை; அன்றியும் நீயும் எழுந்தருளி நின்னருட் கண்ணால் பார்க்கின்றாயில்லை; ஐயோ, விலக்க முடியாத கருணை யுருவாகிய தந்தையே, நான் தளர்ந்து ஒழிந்தேன்; நினக்கு மகனாகிய யான் இவ்வாறு தளருவது அழகாகுமா? எ.று.
கேவலாவத்தையில் ஆன்மா மலப் பிணிப்புற்று ஞான வொளியின்றிக் கண்ணிலாக் குழவி போலச் செயலற்றுக் கிடந்த நிலையை நீக்கி, அபர விந்துவாகிய பரை வென்னும் சத்தியால் சகலாவத்தைக்கண் புகுத்தப்பட்ட நிலையை, “எனைத் தான் வளர்த்திடப் பரையாம் செவிலிபாற் சேர்த்தனை” என்று உரைக்கின்றார். சகல நிலை - ஒளி உருவாகிய உலகியலில் உடலொடு கூடி வாழும் நிலை. இருளில் கிடந்த தன்னை ஒளியில் விடும் பொழுது திடுக்கீடு உண்டாதலின், “திடுக்கற” எனச் செப்புகின்றார். சகலாவத்தையில் உடம்பொடு கூடி யுலகில் வாழும் உயிர் கேவலத்தில் இருந்தது போலச் செயலின்றி யிருத்தல் கூடாமை விளங்க, “அவளோ எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள் என்செய்வேன்” என இயம்புகின்றார். ஞானத்தால் அன்றி வளர்தலும் தேய்தலும் இல்லையாதலின் ஞானம் வழங்கும் தாயாகிய அருட் சத்தி தனக்குத் திருவருள் ஞானத்தை நல்கிற்றிலள் என்றற்கு, “இன்றும் என்னிடைப் பால் மடுக்க நற்றாயும் வந்திலள்” என்றும், ஞான மூர்த்தியாகிய நீ தானும் கடைக்கண் செய்ய வில்லை என்றற்கு, “நீயும் வந்தெனைப் பார்த்திலை” என்றும் எடுத்துரைக்கின்றார். சும்மா விராது கேவியும் கிடந்தும் கைகால்களை அசைத்தும் கிடக்கும் குழவிக்குக் காலமறிந்து பால் நல்கும் நற்றாய் வந்திலளானால் அது சோர்வுறுதல் இயல்பாதலால், “தடுக்கருங் கருணைத் தந்தையே தளர்ந்தேன் தனையனேன் தளர்ந்திடல் அழகோ” என்று கூறுகின்றார். பால் மடுத்தல் - பால் உண்பித்தல், பால் - சிவஞானம்.
இதனால், சகலத்தில் புகுந்த ஆன்மா ஞானம் பெறாது வருந்தும் திறம் கூறியவாறாம். (1)
|