3547. வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற
மகள்கையில் கொடுத்தனன் எனைத்தான்
ஈங்கிவள் கருத்தில் எதுநினைத் தனளோ
என்செய்வேன் என்னையே உணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித்
தொட்டிலும் ஆட்டிடு கின்றாள்
ஏங்குறு கின்றேன் பிள்ளைதன் அருமை
ஈன்றவர் அறிவரே எந்தாய்.
உரை: தந்தையே, சிவசத்தியிடமிருந்து என்னைப் பெற்ற பரையாகிய செவிலித் தாய், எனது ஞானநலம் கெடாமல் தன்பால் ஓம்புமாறு மாயா சத்தியாகிய தன் மகள் கையில் கொடுத்தாளாக, என்னை இம்மாயை தன் மனத்தில் எத்தகையவன் என நினைத்தாளோ அறியேன்; நான் தானும் ஒன்றும் செய்கிலேன்; அவள் எனது உண்மை நிலையை யுணர்ந்து திருவருளின்கண் உறங்க விடாளாய் அடிக்கடி வேற்று நினைவுகளால் வருத்தி ஞான நினைவிலும் உழல்விக்கின்றாள்; நான் இதனால் ஏங்கி வாடுகிறேன்; பெற்ற பிள்ளையினுடைய அருமையைப் பெற்றவரன்றோ அறிகுவர். எ.று.
கேவலத்தில் செயலற்றுக் கிடந்த என்னுடைய அறிவாற்றலைக் கிளர்வித்து மாயா காரியமாகிய சகலத்தில் புகுத்திய இயல்பை, “வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற மகள் கையில் கொடுத்தனள்” என்றும், சகலத்தின்கண் ஆன்மா தன்னை யுணர்ந்து தலைவனை யறிந்து உய்தி பெறுதற்குரிய உணர்வு பெறுதலும், மாயா போக நுகரச்சியால் மறைப்புண்டு வருந்துதலும் இயல்பாதலின், “என்னையே யுணர்ந்து தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித் தொட்டிலும் ஆட்டிடுகின்றாள்” எனச் சொல்லுகின்றார். மாயையின் போக நுகர்ச்சி செய்யும் மயக்கத்தால் தான் வருந்தும் திறத்தை, “ஏங்குறுகின்றேன்” என இசைக்கின்றார். பிள்ளையினுடைய அறிவு வளர்ச்சிக்கண் உள்ள அருமை பெருமைகளைப் பெற்றோர் முதற்கண் நன்கு அறிவர் என்பது பற்றி, “பிள்ளை தன் அருமை ஈன்றவர் அறிவர்” எனப் பேசுகின்றார்.
இதனால் சகலத்தில் உண்மை ஞானம் பெறுவதன் அருமை தெரவித்தவாறாம். (5)
|