பக்கம் எண் :

3550.

     துருவிலா வயிரத் தொட்டிலே தங்கத்
          தொட்டிலே பலஇருந் திடவும்
     திருவிலாப் பொத்தைத் தொட்டிலிற் செவிலி
          சிறியனைக் கிடத்தினள் எந்தாய்
     பிரிவிலாத் தனிமைத் தலைவநீ பெற்ற
          பிள்ளைநான் எனக்கிது பெறுமோ
     கருவிலாய் நீஇத் தருணம்வந் திதனைக்
          கண்டிடில் சகிக்குமோ நினக்கே.

உரை:

     குற்றமில்லாத வயிரத் தொட்டில்களும் பொற் றொட்டில்களும் மிகப் பல இருக்கவும், பொற்பில்லாத துவாரம் நிறைந்த தொட்டிலாகிய உடம்பினில் என்னைக் கிடத்தி விட்டாள்; நீங்குதலில்லாத தனித் தலைவனாகிய நீ அருளிய மகனாகிய எனக்கு இது பொருந்தா தன்றோ? தோற்றக் கேடில்லாத நீ காலம் பார்த்து வந்து எனது இந்நிலையைக் காண்பாயேல் உனது திருவுள்ளம் பொறுக்காது. காண். எ.று.

     துரு - இரும்பு வெள்ளி முதலிய தாதுப் பொருள்களைப் பற்றிக் கெடுக்கும் குற்றப் பொருள். வயிரம், பொன் முதலிய உயரிய பொருள்களைத் துருப்பற்றுவ தில்லையாதலால், “துருவிலா வயிரத் தொட்டில்” எனக் கூறுகின்றார். தேவர்க்கட்குப் பொன் னுடம்பும், முனிவர்கட்கு வயிர வுடம்பும், மக்கட்கு என்பு தோல் போர்த்த வுடம்பும் அமைக்கப்பட்டிருப்பது பற்றி, “வயிரத் தொட்டிலே தங்கத் தொட்டிலே பல இருந்திடவும் திருவிலாப் பொத்தைத் தொட்டிலிற் செவிலி சிறியனைக் கிடத்தினள்” என்று செப்புகின்றார். ஒன்பது பெருந் துவாரங்களையும் மெய்ம் முழுதும் எண்ணிறந்த நுண்ணிய துவாரங்களையும் கொண்டிருத்தலால், மக்களுடம்பைப் “பொத்தைத் தொட்டில்” எனப் புகல்கின்றார். மாயையாகிய பரிக்கிரக சத்தியின் காரியமாகிய உடம்புகள் உயிர் வகை யிருந்து வாழ்தற் கமைந்தவையாகலின், உயிர்க்கு உடம்பு தந்தோம்பும் சிவசத்தியை, “செவிலி சிறியனைக் கிடத்தினள் எந்தாய்” என்று இயம்புகின்றார். உடம்பின்றி வாழ மாட்டாத சிறுமை நோக்கி ஆன்மாவாகிய தன்னை, “சிறியன்” என்று குறிக்கின்றார். எல்லாப் பொருளினும் கலந்திருப்பினும் தன்னைப் பிறிதி யாதும் கலவாத தனிப் பரம்பொருளாதலால் சிவத்தைப் “பிரிவிலாத் தனிமைத் தலைவ” என்று போற்றுகின்றார். சைதன்னியமாம் வகையில் மகனாம் முறைமை யுடைமை விளங்க, “பிள்ளை நான்” என்றும், தனித் தலைவனாகிய உனது பெருமைக்கும் மகனாகிய எனது தகுதிக்கும் இப் பொத்தைத் தொட்டில் பொருந்தாது எனப் புகல்வாராய், எனக்கு இது பெறுமோ” என்று பேசுகின்றார். தோற்ற முடையன கெடும் தன்மைய என்னும் கருத்துப் பற்றி, “கருவிலாய்” எனக் கூறுகின்றார். அருளுருவினனாகிய நீ கண்ணிற் காணின் எனது நிலை கண்டு வருந்துவாய் என்பாராய், “கண்டிடில் சகிக்குமோ நினக்கே” என்று முறையிடுகின்றார். சகித்தல் - தாங்குதல்.

     இதனால் சைதன்யப் பொருளாகிய தன்னை அசேதனமாய்த் துவாரம் பல வுடையதாகிய உடம்பிற் பொருத்தியது நேரிதன்று என முறையிட்டவாறாம்.

     (8)