பக்கம் எண் :

3551.

     காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும்
          கனிவிலாள் காமமா திகளாம்
     பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப்
          பயம்புரி வித்தனள் பலகால்
     தேய்ந்திடு மதிஎன் றெண்ணினாள் குறையாத்
          திருமதி எனநினைந் தறியாள்
     சாய்ந்தஇச் செவிலி கையிலே என்னைத்
          தந்தது சாலும்எந் தாயே.

உரை:

     எந்தையாகிய சிவபெருமானே, பரை யென்னும் சத்தியாகிய செவிலி என்னை வெறுத்த மனமுடையவள் போலச் சிறிதும் இரக்கப் பண்பின்றிக் காமம் வெகுளி முதலிய குற்றங்களாகிய பிற பொருள்களின் மேற் பாய்ந்து பற்றும் வேட்டுவர்களால் பன்முறையும் எனக்கு அச்சமே எய்துவித்தாள்; என் ஆன்ம வறிவைத் தேய்ந்து கெடும் இயல்பின தென எண்ணினாளே யன்றி, தேயாது வளர்ந்து சிறக்கும் செல்வ ஞானம் எனச் சிந்தித்தாளில்லை; சோர்வுடைய செவிலி பால் என்னைச் சேர விட்டது போலும்; இனி என்னை எடுத்து ஆண்டருள்க. எ.று.

     காய்தல் - வெறுத்தல். பரையாகிய சத்தி நற்சிந்தை யுடையவளாகத் திகழினும் என்பால் வேறுபட் டொழுகினாள் என்பாராய், “காய்ந்திடு மனத்தாள் போன்றவள்” என்றும், இரக்கமின்றி வருந்தினள் என்பார், “சிறிதும் கனிவிலள்” என்றும் தெரிவிக்கின்றார். கனிவு - இரக்கப் பண்பால் மனம் குழைதல். காமமாதிகள் - காமம், வெகுளி, உலோபம், மோகம், மதம், மாற்சரியம் எனப்படும் அறுவகைக் குற்றங்கள். வேட்ட பொருள் மேல் தடை நோக்காது வீழ்ந்து பற்றுதல் வேட்டுவர் இயல்பாதலின், “பாய்ந்திடு வேட்டைப் பயல்கள்” என இகழ்தற்கண் வந்தது. பயல் - பைதலைச் செய்பவர். பைதல் - துன்பம். இது பயல் என மருவிற்று. பயம் - அச்சத்தால் விளையும் குற்றம். தேய்மதி - சிறுகிக் கெடும் அறிவு. ஆன்மா, அறிவுருவினதாய், நாளும் சிறந்து மேம்படும் இயல்பினதாதலால், “தேய்ந்திடு மதியென் றெண்ணினா குறையாத் திருமதி என நினைந்தறியாள்” எனக் கூறுகின்றார். இதுகாறும் கூறியவற்றால் பரையாகிய செவிலி நேர்மை யில்லாதவள் எனப் புலப்படுத்தினமை பற்றி, “சாய்ந்த இச் செவிலி” என்கின்றாராம்.

     இதனாள், செவிலியாகிய பரை யென்னும் சத்தியின் நேர்மையில்லாமை குறித்தவாறாம்.

     (9)