பக்கம் எண் :

3554.

     வட்டவான் சுடரே வளர்ஒளி விளக்கே
          வயங்குசிற் சோதியே அடியேன்
     இட்டமே இட்டத் தியைந்துளே கலந்த
          இன்பமே என்பெரும் பொருளே
     கட்டமே தவிர்த்திங் கென்னைவாழ் வித்த
          கடவுளே கனகமன் றகத்தே
     நட்டமே புரியும் பேரருள் அரசே
          நம்பினேன் கைவிடேல் எனையே.

உரை:

     வட்ட உருவினவாய் வானத்தே விளங்குகின்ற சுடர்களாகியவனே, மேன் மேலும் ஒளி மிகும் விளக்குப் போல்பவனே, விளங்குகின்ற ஞான வொளியே, அடியேனுடைய விருப்பமே, அவ் விருப்பத்துள் கலந்து இயைந்திருக்கும் இன்பமே எனக்குப் பெரிய பொருளாகியவனே, துன்பங்களை நீக்கி இவ்வுலகில் என்னை வாழ்வித்த கடவுளே, பொற் சபையின்கண் திருக்கூத்தாடும் பெரிய அருளரசே, உன்னையே நம்பி யுள்ளேனாதலால், என்னைக் கைவிடல் வேண்டாம். எ.று.

     வானத்தின்கண் தோன்றுகின்ற ஞாயிறு முதலிய கோளும், விண்மீன்களும் பிறவும் வட்டமாய் ஒளிர்தலால் அவற்றின் உள்ளீடாக இருந்து ஒளிரச் செய்யும் சிவ பரம் பொருளை, “வட்ட வான்சுடரே” எனப் பாராட்டுகின்றார். நின்றாங்கு நின்று ஒளி செய்யும் உலகியல் ஒளிப் பொருள்களைப் போலல்லாமல் மேன் மேலும் பெருகுகின்ற ஒளி செய்யும் விளக்குப் போல்பவன் என்றற்கு “வளர் ஒளி விளக்கே” என உரைக்கின்றார். பிற சான்றோரும் “ஒளி வளர் விளக்கே” (இசைப்) என உரைப்பது காண்க. ஞாயிறு திங்கள் முதலிய ஒளிப் பொருள்களின் ஒளியின் வேறாய் ஞானம் வழங்குதல் பற்றிச் சிவத்தின் ஒளியை, “வயங்கு சிற்சோதி” எனத் தெரிவிக்கின்றார். அடிமையாகிய தம்மால் பெரிதும் விரும்பப் படுவது தோன்ற, சிவனை “அடியேன் இட்டமே” என்றும், விரும்பிய பொருளை விரும்பியாங்கு நுகருமிடத்து இன்பம் சுரத்தலின், “இட்டத்து இயைந்துளே கலந்த இன்பமே” எனச் சிவ பரம் பொருளைச் சிறப்பிக்கின்றார். பரம்பொருளாதலால் “என் பெரும் பொருளே” என இயம்புகின்றார். பெரும் பொருள் - பிரமப் பொருளுமாம். கட்டம் - கஷ்டம் என்ற வடசொல்லின் திரிபு; துன்பம் என்பது பொருள். சிவநெறிக்கண் தாம் அச்சிவத்தின் திருவருளால் இனிது வாழ்தல் பற்றி, “இங்கு என்னை வாழ்வித்த கடவுளே” என வுரைக்கின்றார். கனகமன்று - பொற்சபை. நட்டம் - திருக்கூத்து. திருவருட் கூத்தை யாடுகின்ற கூத்தப் பிரான் எனச் சான்றோர் போற்றித் துதித்தலை நோக்கி “நட்டமே புரியும் பேரருள் அரசே” என்று போற்றுகின்றார்.

     இதனால், தம்மைக் கைவிடாது காத்தருளுமாறு வள்ளற் பெருமான் இறைவனிடம் வேண்டியவாறாம்.

     (2)