360. அமராவதி இறையோடுநல் அயனுந் திருமாலும்
தமராகுவர் சிவஞானமுத் தழைக்குங் கதிசாரும்
எமராசனை வெல்லுந்திறல் எய்தும் புகழ்எய்தும்
குமாரசிவ குருவேயெனக் குளிர்நீறணிந் திடிலே.
உரை: குமரா சிவகுருவே என்று சொல்லிக் குளிர்ந்த திருநீற்றை யணிந்து கொண்டால் அமராவதிக்கு அரசனாகிய இந்திரனும், நல்ல பிரமனும், திருமாலும் சமநிலை உறவினராகுவர்; சிவஞானமும் அதனால் சிவகதியும் வந்தெய்தும்; எமராசனை வெற்றி கொள்ளும் வலிமை யுண்டாகும்; புகழ் தோன்றிப் பரவும், எ. று.
அமராவதி - தேவருலகத்துத் தலைநகர். அங்கே யிருந்து தேவர்கட்கு அரசு புரிபவன் இந்திரன். வேதங்களை எப்பொழுதும் ஓதுபவனா தலால் பிரமனை, “நல்லயன்” என்று கூறுகின்றார். அயனும், திருமாலும், இந்திரனும் தொழிலால் வேறு பட்டாராயினும் திருநீறணியும் சிவபுண்ணியச் செயலால் சமநிலையராய் உறவு கொள்வராதலால், “தமராகுவர்” என்கின்றார். சிவஞானத்தால் அன்றிச் சிவகதி எய்தாதென்பது பற்றிச் “சிவஞானமுந் தழைக்கும் கதி சாரும்” என்று கூறுகின்றார். எமனைத் தென் திசைக்கோன் என்பது பற்றி, “எமராசன்” என்று குறிக்கின்றார். அவன் உயிர்களுக்குச் சாக்காட்டைச் செய்பவனாதலால் சாவாநிலைமை எய்தலாம் என்பதற்கு, “எமராசனை வெல்லுந் திறல் எய்தும்” எனவுரைக்கின்றார்.
இதனால் குமரா சிவகுருவே எனவோதித் திருநீறு அணிவதால் எய்தும் பயன் கூறியவாறாம். (6)
|