பக்கம் எண் :

3613.

     கருணா நிதியே அபயம் அபயம்
          கனகா கரனே அபயம் அபயம்
     அருணா டகனே அபயம் அபயம்
          அழகா அமலா அபயம் அபயம்
     தருணா தவனே அபயம் அபயம்
          தனிநா யகனே அபயம் அபயம்
     தெருணா டுறுவாய் அபயம் அபயம்
          திருவம் பலவா அபயம் அபயம்

உரை:

     திருவருட் செல்வமே, பொன்னுறையும் இடமே, திருவருளை நாடுவோருடைய உள்ளத்தில் எழுந்தருள்பவனே, அழகனே, அமலனே, காலை இளஞ் சூரியனே, ஒப்பற்ற நாயகனே, தெளிந்தோர் உள்ளங்களில் எழுந்தருள்பவனே, தில்லைப் பொன்னம்பலத்தை யுடையவனே, நீயே எனக்குப் புகலாவாய். எ.று.

     கருணாநிதி - கருணையாகிய செல்வம். கருணை என்னும் வடசொல்லுக்கு அருள் என்பது தமிழிச் சொல். கனக ஆகரன் - கனகாகரன் என வந்தது. கனகம்-பொன். ஆகரன் - இடமாகியவன். திருவருள் ஞானத்தை விரும்புவோருடைய தூய மனத்தின்கண் எழுந்தருளுவது பற்றிச் சிவனை, “அருள் நாடு அகன்” எனப் போற்றுகின்றார். மலப் பிணிப்புண்ட உயிர்கள் தோறும் உயிர்க்குயிராய்க் கலந்திருந்தானாயினும் சிவன் அம்மலத்தால் தீண்டப் படாமை பற்றி, “அமலன்” என அறிவிக்கின்றார். தருண ஆதவன். தருணாதவன் என்று வந்தது. இங்கே தருணம் என்பது தருணேந்து சேகரன் (இசைப்பா) என்பொழிப் போல இளமை குறித்து நின்றது. காலை இளஞ்சூரியன் என்பது கருத்து. சிவனது திருமேனி ஒளி, காலை இளஞ் சூரியனது பொன்னிற ஒளி போறலின் சிவனை, “தருணாதவனே” எனப் புகழ்கின்றார். சிவனோடு ஒப்பாரும் மிக்காரும் இல்லையாதலால், “தனி நாயகன்” என்று போற்றுகின்றார். தெருள் - தெளிவு மிக்க சிவஞானம். சிவஞானத்தை நாடி நிற்கின்ற சிவஞானிகளின் திருவுள்ளத்தில் நீங்காது நிலவுதலால் சிவபெருமானை, “தெருணாடு உறுவாய்” எனச் செப்புகின்றார். தில்லையம்பலத்தைத் தனக்கே உரிமையாகக் கொண்டவன் என்பது பற்றி, “திருவம்பலவா” எனப் போற்றுகின்றார்.

     இதனால், சிவனே தனக்குப் புகலாகுபவன் எனப் புகன்றவாறாம்.

     (3)