பக்கம் எண் :

3616.

     அடியார் இதயாம் புயனே அபயம்
          அரசே அமுதே அபயம் அபயம்
     முடியா தினிநான் தரியேன் அபயம்
          முறையோ முறையோ முதல்வா அபயம்
     கடியேன் அலன்நான் அபயம் அபயம்
          கருணா கரனே அபயம் அபயம்
     தடியேல் அருளவாய் அபயம் அபயம்
          தருணா தவனே அபயம் அபயம்.

உரை:

     மெய்யடியார்களின் இதயத் தாமரையில் இருப்பவனே, அருளரசே, அமுத மயமானவனே, கருணாகரனே, தருணாதவனே, இவ்வுலகியல் துன்பங்களை இனியும் நான் பொறுக்க முடியாது; பொறுக்கவும் மாட்டேன்; இவ்வாறு நான் வருந்துவது முறையாகுமா; எல்லோர்க்கும் எப்பொருட்கும் முதல்வனே, நீயே எனக்கு அபயம்; நானும் நின்னால் விலக்கப்படத் தக்கவன் அல்ல; என்னை விலக்காமல் ஆண்டருள்க; நினக்கு யான் அபயம். எ.று.

     இதய அம்புயன் - மனமாகிய தாமரையில் எழுந்தருள்பவன். இனி முடியாது என்பது பொறுக்கும் ஆற்றல் மேல் நின்றது. நான் தரியேன் என்பது உயிரினது மாட்டாமை யுணர நின்றது. கடிதல் - விலக்குதல். கருணாகரன் - கருணை ஆகரன் எனப் பிரிந்து கருணையாகிய கடற்கு இடமாகியவன் எனப் பொருள்படும். தடிதல் - குறைத்தல்; விலக்குதலுமாம். தருண ஆதவன் - தருணாதவன் என வந்தது.

     இதனால், உலகியல் துன்பம் பொறுக்க மாட்டாமை கூறித் தமது நிலையையும் வெளிப்படுத்தியவாறாம்.

     (6)