பக்கம் எண் :

3619.

     இடர்தீர் நெறியே அருள்வாய் அபயம்
          இனிநான் தரியேன் தரியேன் அபயம்
     விடர்போல் எனைநீ நினையேல் அபயம்
          விடுவேன் அலன்நான் அபயம் அபயம்
     உடலோ டுறுமா பொருள்ஆ வியும்இங்
          குனவே எனவே அலவே அபயம்
     சுடர்மா மணியே அபயம் அபயம்
          சுகநா டகனே அபயம் அபயம்.

உரை:

     ஒளிருகின்ற பெரிய மாணிக்க மணி போல்பவனே, அந்தமில் இன்ப நாட்டை யுடையவனே, துன்ப மனைத்தும் போக்கும் நன்மார்க்கத்தையே ஆன்மாக்கட்கு வழங்குபவனே, இப்போது இவ்வுலகியல் துன்பங்களை யான் பொறுக்க மாட்டேன்; வீணர்களைப் போல் என்னைக் கருதுதல் வேண்டா; நான் உன்னை விடுபவ னல்லன்; எனது உடம்போடு என்பால் உறுகின்ற மிக்க பொருளும் உயிரும் உனக்கு உரியனவே, எனக்கு உரியனவல்ல. எ.று.

     மாணிக்க மணி போல் திகழும் திருமேனியை யுடையவனாதலின் சிவனை, “சுடர் மாமணியே” என்கின்றார். அந்தமில் இன்பத்து அழிவில் வீடு எனப்படும் இன்ப நாட்டில் உறைபவனாதலின், “சுக நாடகன்” எனச் சொல்லுகின்றார். பிறவிக் கேதுவாகிய நெறிகளில் கிடந்து உழன்றமை புலப்பட, “இடர் தீர் நெறியே அருள்வாய் அபயம், இனி நான் தரியேன் தரியேன் அபயம்” என்று கூறுகின்றார். வீடர் - வீணர். விடரும் தூர்த்தருமாகிய தீயவர் இனத்தைச் சேர்ந்தவ னல்லன் எனத் தமது இயல்பு எடுத்தோதி விளக்குகின்றாராதலின், “விடர் போல் எனை நீ நினையேல் அபயம் விடுவே னலன் நான் அபயம் அபயம்” என விளம்புகின்றார். உடல், பொருள், ஆவி என்ற மூன்றனுள் பொருள் தம்மால் பெரிதாக ஈட்டப்படுவது பற்றி, “மாபொருள்” எனச் சிறப்பிக்கின்றார். உன, என உன்பவை உன்னுடையவை, என்னுடையவை என்ற பொருளில் வழங்குகின்றன. “நினவ கூறுவல் எனவ கேண்மதி” (புறம். 35) எனச் சான்றோர் வழங்குதல் அறிக.

     இதனால், வள்ளற் பெருமான் தம்முடைய உடல் பொருள் ஆவி மூன்றையும் இறைவனுக்கு உரிமை செய்தவாறாம்.

     (9)