3620. குற்றம் பலஆ யினும்நீ குறியேல்
குணமே கொளும்என் குருவே அபயம்
பற்றம் பலமே அலதோர் நெறியும்
பதியே அறியேன் அடியேன் அபயம்
சுற்றம் பலவும் உனவே எனவோ
துணைவே றிலைநின் துணையே அபயம்
சிற்றம் பலவா அருள்வாய் இனிநான்
சிறிதுந் தரியேன் தரியேன் அபயம்.
உரை: தில்லைச் சிற்றம்பலத்தை யுடைய பெருமானே, குருபரனே, என்பால் குற்றங்கள் பல உள்ளனவாயினும் அவற்றைக் கொள்ளாமல் குணமே கொண்டருள வேண்டுகிறேன்; சான்றோர்களால் பற்றாகக் கருதப்படும் தில்லையம்பலம் அல்லது வேறு பற்றும் பதியும் உய்தி தருவனவாக வெண்ணி அறியேன்; என்னுடைய சுற்றத்தார் பலரும் உன் சுற்றத்தாரே, என்னுடைய சுற்றத்தா ரல்லர்; எனக்கும் உனது துணையன்றி வேறு துணை கிடையாது; ஆதலால், இவ்வுலகியல் துன்பங்களை இனி நான் சிறிதும் பொறுக்க மாட்டேன் காண். எ.று.
குற்றம் நீக்கிக் குணம் கொண்டு பாராட்டும் இயல்பினனாதல் புலப்பட, சிவனை, “குற்றம் பலவாயினும் நீ குறியேல், குணமே கொளும் என் குருவே அபயம்” எனக் கூறுகின்றார். பற்றம்பலம் - பற்றாய் உள்ள இடம். அம்பலம் அடையும் நெறி யல்லது நன்னெறி வேறின்மை தோன்ற, “பற்றம்பலமே அலதோர் நெறியும் பதியே அறியேன்” என உரைக்கின்றார். உலகியல் சுற்றத்தாரைத் தமக்கு உரியவராகக் கருதாமை விளங்க, “சுற்றம் பலவும் உனவே எனவோ” என இசைக்கின்றார். சிவனது துணையல்லது வேறு யாதனையும் துணையாகக் கருதாமையின், “துணை வேறிலை நின் துணையே அபயம்” என்று சொல்லுகின்றார்.
இதனால், தில்லையம்பலவனது திருவருள் துணை யல்லது பிறிதொன்றும் நாடாமை தெரிவித்தவாறாம். (10)
|