பக்கம் எண் :

19. பிரிவாற்றாமை

    அஃதாவது, இறைவனுடைய திருவருள் ஞானத் தொடர்பினின்றும் பிரிந்திருக்க மாட்டாத தன்மையை எடுத்துரைத்தல்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3621.

     போக மாட்டேன் பிறரிடத்தே
          பொய்யிற் கிடந்து புலர்ந்துமனம்
     வேக மாட்டேன் பிறிதொன்றும்
          விரும்ப மாட்டேன் பொய்யுலகன்
     ஆக மாட்டேன் அரசேஎன்
          அப்பா என்றன் ஐயாநான்
     சாக மாட்டேன் உனைப்பிரிந்தால்
          தரிக்க மாட்டேன் கண்டாயே.

உரை:

     அருளரசே, எனக்கு அப்பனே, எனக்குத் தலைவனே, உதவி நாடிப் பிறரிடம் போக மாட்டேன்; அவர் சூழலிற் சிக்கி மனம் ஈரமற்று வெந்தழிய மாட்டேன்; நின் திருவருளை விடுத்து வேறு யாதும் விரும்ப மாட்டேன்; பொய்ம்மை நிறைந்த உலகில் வாழும் ஒருவனாகி இறக்க மாட்டேன்; உன்னை நினைப்பதினின்றும் பிரிவேனாயின் உயிரைத் தாங்கி யிரேன். எ.று.

     பலரொடும் கூடி வாழ்வது மக்களினத்தின் பண்பாதலால் பிறரொடு கூடி இயங்குவேனாயினும் பொன்னையோ பொருளையோ விரும்பிப் பிறர்பாற் போக மாட்டேன் என்பாராய், “போக மாட்டேன் பிறரிடத்தே” எனக் கூறுகின்றார். அவரது சூழலில் பொய் முதலிய குற்றங்கள் நிறைந்திருத்தலால், யானும் அவற்றைச் செய்து மனவேதனை யுற்று வெந்தழியேன் என்பார், “பொய்யிற் கிடந்து புலர்ந்து மனம் வேக மாட்டேன்” என விளம்புகின்றார். உலகவர் பலரும் பொய்ந்நினைவும் பொய்ம்மொழியும் பொய்ச்செயலும் உடையவராதலால், யான் அவருள் ஒருவனாதலை விரும்ப மாட்டேன் என்று கூறலுற்று, “பொய் யுலகனாக மாட்டேன்” என்றும், அவ்வாழ்வின் எல்லை இறத்தலாதலின், “என்றன் ஐயா நான் சாக மாட்டேன்” என்றும் இயம்புகின்றார். பிரிதலாவது - சிவ பெருமானை நினைத்தலும் திருவுருவைக் கண்டு மகிழ்தலும் வழிபடுவதுமாகிய செயலைக் கைவிடுதல். இந்த நற்பணிகளைச் செய்யா தொழிவேனாயின் உயிர் தாங்கேன் என்பாராய், “உனைப் பிரிந்தால் தரிக்க மாட்டேன்” என வுரைக்கின்றார்.

     இதனால், சிவ நினைவும் வழிபாடும் ஒழிந்தால் இறந்து படுபவன் என மொழிந்தவாறாம்.

     (1)