20. இறை பொறுப் பியம்பல்
அஃதாவது, ஆன்ம குண வியல்பாற் சிற்றறிவும் சிறுசெயலும் உடையனாயினும் இறைவற்குரிய திருப்பணி வகைகளைச் செய்வ தொழியாமை பற்றி நன்ஞானமும் நல்லருளும் தந்தருளிக் காத்தல் கடன் என முறையிடுதல்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 3631. தேடிய துண்டு நினதுரு வுண்மை
தெளிந்திடச் சிறிதுநின் னுடனே
ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே
உரைத்ததும் உவந்ததும் உண்டோ
ஆடிய பாதம் அறியநான் அறியேன்
அம்பலத் தரும்பெருஞ் சோதி
கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்
கூறவுங் கூசும்என் நாவே.
உரை: தில்லைப் பொன்னம்பலத்தின்கண் எழுந்தருளும் அருமையும் பெருமையும் உடைய சோதியுருவாகிய பெருமானே, நினது உண்மைத் திருவுருவைக் காண விரும்பி நான் தேடிய துண்டு; தெளிவாகக் காண மாட்டாமையால் அது குறித்து மனத்தால் நின்னோடு பிணங்கிய துண்டே யெனினும் பிறர்பால் என் பிணக்கினைப் பேசியதோ பேசி மகிழ்ந்ததோ இல்லை; அம்பலத்தில் திருக்கூத்தாடிய நினது திருவடி யறிய நான் அறியேன்; உனது திருவருள் நெறியைச் சேர்ந்த யான் பிரிந்தொழுகும் திறமில்லேன்; பிரிவை வாயாற் சொல்லவும் எனது நா கூசும் இயல்பினது காண். எ.று.
உருவம் நான்கு அருவம் நான்கு உருவரும் ஒன்று என ஒன்பது கூறுபவாதலின், இவற்றுள் உண்மை யுருவைத் தெளிந்து கொள்ள நான் முயன்ற துண்டு என்றற்கு, “தேடிய துண்டு நினது உருவுண்மை” என தெரிவிக்கின்றார். முயன்ற விடத்து இவ்வொன்பதுமே கூறப்பட்டமையின் உண்மை யுருவைத் திட்டமாகத் தெளிய முயன்றபோது “இன்னவுரு இன்ன நிறம் என்றறிவதே லரிது நீதி பலவும் தன்ன வுருவாமென மிகுத்ததவன்” (வைகா) என ஞானசம்பந்தர் போன்றோர் கூறினமையின், பல வுருவுடைய பரம்பொருட்கு உண்மை யுருவொன்றிருத்தல் வேண்டுமென்ற கருத்தால் மனத்தின்கண் பிணக்குற்ற துண்டு என்பார், “தெளிந்திடச் சிறிது நின்னுடனே ஊடிய துண்டு” என்று இயம்புகின்றார். அவ் வூடலையும் உள்ளத்திற் கொண்ட தன்றிப் பிறர்பால் உரைத்ததோ உரைத்து மகிழ்ந்ததோ இல்லை என்பாராய், “பிறர் தமையடுத்தே உரைத்ததும் உவந்ததும் உண்டோ” என ஓதுகின்றார். ஊடலும் உவத்தலும் கூடி மகிழும் மெய்யன்பர் செயலாதலால், “உவந்ததும் உண்டோ” என வுரைக்கின்றார். “ஊடுவ துன்னோடு உவப்பதும் உன்னை யுணர்த்துவ துனக் கெனக் குறுதி” (வாழாப்) என மணிவாசகனார் உரைப்பது காண்க. ஊடலும் உணர்த்தலும் உவத்தலும் எனக்கு உறுதி பயப்பனவாயினும், இனையர் இவர் எமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு” (குறள்) என்பது பெரியோர் கூறுதலின், அதனை யான் நின் திருவடியறியச் சொல்லுகின்றேன் என்பார், “ஆடிய பாதம் அறிய நான் அறியேன்” என வுரைக்கின்றார். உயிர்க் குயிராய் நிற்கும் தன்மையால் தன்னைச் சிவ பரம்பொருள் அறிவது போலத் தான் அதனையறிய மாட்டாமை பற்றி “கூடிய நின்னைப் பிரிகிலேன்” எனவும், அன்புடையார்க்குப் பிரிவினும் இன்னாதது வேறின்மையால் “பிரிவைக் கூறவும் கூசும் என் நாவே” எனவும் இசைக்கின்றார். காண்டற் கருமை பற்றியும், எய்தலாகாமை நோக்கியும் சிவ பரஞ்சோதியை “அம்பலத்தாடும் அரும் பெருஞ் சோதி” எனப் புகல்கின்றார்.
இதனால், நின்னோடு யான் ஊடிப் பிரிவு கருதியது இன்மையின் எனக்கு அருளுவது நினது பொறுப்பு எனக் கூறியவாறாம். (1)
|